குறைசொல்கிறேன் என்கிற போர்வையில் கமல்ஹாசன் மக்களை சாடுகிறார்: டிடிவி தினகரன் விமர்சனம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனக்கு வெற்றியை தேடித்தந்த மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக நன்றி சொல்லி வருகிறார் வெற்றிப்பெற்ற டிடிவி தினகரன்.

இன்று ஆர்.கே.நகரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் கமல்ஹாசன் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:

“வென்றவர்களை குறைச்சொல்கிறேன் என்கிற போர்வையில் கமல்ஹாசன் மக்களை சாடுகிறார். அவர் ஒரு நடிகராக இருக்கிறார். அரசியல் களம் தன்மை புரிந்து பேசுகிறாரா? புரியாமல் பேசுகிறாரா? எனத் தெரியவில்லை. விஷால் துணிச்சலாக தேர்தலில் குதித்தார். அவரை சதி செய்து போட்டியிடவிடவில்லை.

இவர் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என ட்விட்டரிலும் ஊடகத்திலும் போய் நின்று பேட்டி கொடுக்கிறார். உண்மையில் வேட்பாளராக களத்தில் குதித்திருக்க வேண்டும். அது மாதிரி நீங்கள் துணிச்சலாக போட்டியிட்டிருந்தால் அரசியல் நிலவரம் புரிந்திருக்கும்.

அதை விட்டுவிட்டு கமல் பேசுவது அவர் வயதுக்கும் அனுபவத்திற்கும் சரியாகத் தெரியவில்லை. அவர் விமர்சனம் என்ற போர்வையில் மக்களை சாடுகிறார். பணத்திற்காக வாக்களித்தார்கள் என்று ஏழை எளிய மக்களை கேவலப்படுத்துகிறார்.

உண்மையில் பணம் வென்றிருந்தால் இரட்டை இலைதான் வென்றிருக்கும். நாங்கள் மக்களுக்கு பணம் கொடுக்கவில்லை. உங்கள் எதிரிலேயே மக்களிடம் நானே நேரடியாக பலமுறை கேட்டிருக்கிறேன். அவர்கள் மறுத்துள்ளனர். இது போன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து உண்மை நிலையை அறிந்தால்தான் சரியான தீர்வாக இருக்கும்.

இது ஏதோ சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனமோ, யாரோ எழுதிக்கொடுக்கும் கதையில் வசனம் பேசி நடிக்கும் விஷயமோ அல்ல. கமல்ஹாசன் விமர்சனம் என்ற போர்வையில் சாதாரண உழைப்பாளி மக்களை, பொதுமக்களை அவமானப்படுத்துகிறார்.

ஆர்.கே.நகர் மக்களை 2.5 லட்சம் வாக்காளர்களாக சுருக்கி பார்க்காதீர்கள். இவர்கள் தமிழக மக்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் காட்டியுள்ளனர்.

தேர்தல் வெற்றியை மதத்தை தாண்டி எல்லா விஷயங்களையும் பாகுபாடுக்ஜளையும் தாண்டி எங்களை ஜெயலலிதாவின் வாரிசுகள், சசிகலாவின் தொண்டர்கள் என அங்கீகரித்துள்ளனர்.

ஜெயலலிதாவிற்கு பிறகு ஜெயலலிதாவின் வாரிசுகள் நாங்கள்தான் என்பதை தமிழக மக்கள் எல்லோருக்கும் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆர்.கே.நகர் மக்கள் அதன் பிரதிநிதியாக எங்களுக்கு வாக்களித்துள்ளனர்”

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top