அணுஆயுதங்களை இயக்கும் ஸ்விட்ச் எனது மேஜையில் தயார் நிலையில் உள்ளது: அமெரிக்காவுக்கு வடகொரிய எச்சரிக்கை

கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா கடந்த சில ஆண்டுகளில் அணுகுண்டு–ஹைட்ரஜன் குண்டு சோதனை, அணு ஏவுகணை என 6–க்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது. மேலும் அமெரிக்காவின் இந்த செயலுக்கு ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் உதவி வருவதாகவும் வடகொரியா தெரிவித்தது.

கடைசியாக கடந்த நவம்பர் மாதம் 28–ந்தேதி ஹவாசாங்–15 என்னும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது.

ஆனால் இன்றளவும் தென் கொரியாவில் உள்ள தனது போர் கப்பல்களை அமெரிக்கா திரும்ப பெறவில்லை.

இந்த நிலையில், அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் தலைவர் மைக் முல்லன் கூறுகையில், ‘‘முன்பு இருந்ததைவிட வடகொரியா மீது அணு ஆயுத போர் தொடுக்கும் நிலையை அமெரிக்கா நெருங்கி உள்ளது’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் புத்தாண்டு தின கொண்டாட்டத்தையொட்டி நேற்று தொலைக்காட்சியில் பேசியபோது பதில் அளித்தார்.

அவர் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் அனைத்து பகுதிகளும் வடகொரியாவின் அணு ஆயுதங்களின் வளையத்துக்குள்தான் இருக்கின்றன. இதை அணு ஆயுத மிரட்டல் என்று கருதக்கூடாது. எதார்த்த நிலை என்பதை அமெரிக்கா உணர்ந்து கொள்ளவேண்டும். அவர்களால் எப்போதும் அணு ஆயுத போரைத் தொடங்க முடியாது. ஏனெனில் அணு ஏவுகணை உள்ளிட்ட அனைத்து வித அணு ஆயுதங்களின் பொத்தானும் எந்த நேரமும் எனது மேஜையில்தான் உள்ளது. எங்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து எந்த வடிவில் அணு ஆயுத மிரட்டல் வந்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம்’’.

எனது நாட்டின் அணுசக்தி படைகள் அமெரிக்காவிடமிருந்து நாட்டைக் காக்கும் சக்தி வாய்ந்த பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவே ஏவுகணை, அணுஆயுத சோதனை நடத்தப்பட்டது என்று வடகொரியா தெரிவித்தது.

”வடகொரியாவின் சுதந்திரம், நீதியை எந்த நாட்டு சக்தியும் தடுத்துவிட முடியாது. நாட்டின் சுய பாதுகாப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் அணுசக்தி திட்டங்கள் மேம்படுத்தப்படும். வடகொரியா பொறுப்புள்ள ஒரு அணுஆயுத நாடாக தொடர்ந்து இருக்கும்.

வரும் 2018-ம் ஆண்டிலும் அணுஆயுத மேம்பாடு தொடரும். அந்தக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை” என்று கிம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் கிம் ஜாங் அன்னின் புத்தாண்டு உரையில் இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியை தெரிவித்தார்.

அடுத்த மாதம் (பிப்ரவரி) 6–ந்தேதி முதல் 25–ந்தேதி வரை தென்கொரியாவின் பியான்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதுபற்றி தனது பேச்சில் கிம் ஜாங் அன் குறிப்பிடுகையில், ‘‘பியான்சாங் நகரில் நடைபெற இருக்கும் குளிர்கால் ஒலிம்பிக் போட்டிக்கு வடகொரியா தனது வீரர், வீராங்கனைகளை அனுப்பி வைக்கும். வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையேயான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top