அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார்: டி.டி.வி.தினகரன்

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சியாக போட்டியிட டி.டி.வி.தினகரன், குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த 29-ந்தேதி சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.

தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மன்னார் குடி அருகே உள்ள தட்டாங்காவில் கிராமத்தில் உள்ள வீரமணவாள சுவாமி குலதெய்வ கோவிலுக்கு தினகரன் நேற்று தரிசனம் செய்தார்.

இதன்பின்னர் மாலையில் தினகரன், மன்னார்குடி சென்று சசிகலாவின் தம்பி திவாகரனை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்தனர்.

இதன்பின்னர் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி- ஓ.பன்னீர் செல்வத்திடம் வெறும் ஆட்சி , அதிகாரம் மட்டுமே உள்ளது. அதுவும் மிக விரைவில் கானல் நீராக போகும். தொண்டர்களின் பலம் எங்களிடம் உள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பிறகு தினகரன் காணாமல் போய்விடுவார் என்று எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் சொன்னார்கள். அவர்களின் கனவு பொய்யாகி விட்டது. இப்போது அவர்கள் தான் காணாமல் உள்ளனர்.

நாளை (3-ந் தேதி) ஆர்.கே. நகர் தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன்.

என்மீது போடப்பட்டுள்ள வழக்குகள் காரணமாக 3 மாதத்துக்கு பிறகு தினகரன் காணாமல் போய் விடுவார் என்று கூறியுள்ளார்கள். அந்த வழக்குகளை நீதிமன்றத்தின் மூலம் சந்தித்து வெற்றி பெறுவேன். எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குள் எந்த கருத்துவேறுபாடும், மோதலும் இல்லை.

கட்சி எங்கள் வசம் தான் உள்ளது. துரோகத்தால் பறிபோன இரட்டை இலை சின்னம் மிக விரைவில் எங்கள் பக்கம் வரும்.

எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா வழியில் எங்களின் ஆட்சி இனி நடைபெறும். அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார். அது சரித்திர வெற்றிகளை குவிக்கும் அத்தியாயமாக தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top