வடகொரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி அமெரிக்க குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு

 

 

ஐ.நா. சபையின் தடையை மீறி வடகொரியாவுக்கு சீனா சட்டவிரோதமாக எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது என்ற குற்றச்சாட்டை அந்நாடு மறுத்துள்ளது.

 

அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது  அமெரிக்காவின் அழுத்தத்தால் ஐ.நா. சபை பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

 

 

இந்தத் தடைகளை உலக நாடுகள் அனைத்தும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. ஆனால் வடகொரியாவுக்கு சீனா மறைமுகமாக உதவி செய்து வருகிறது என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆரம்பம் முதலே குற்றம் சாட்டி வருகின்றன.

 

வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வடகொரியாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆண்டுக்கு 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை மட்டுமே வடகொரியா இறக்குமதி செய்யலாம். ஆனால் அந்த நாட்டுக்கு சீன சரக்கு கப்பல்கள் தாராளமாக கச்சா எண்ணெய் விநியோகம் செய்து வருவது அமெரிக்க செயற்கைக்கோள்கள் எடுத்த புகைப்படங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

மேலும் சர்வதேச கடல் எல்லையில் வடகொரிய கப்பலுக்கு கச்சா எண்ணெயை பரிமாற்றம் செய்த சீன சரக்கு கப்பல் ஒன்றை தென்கொரிய கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

 

 

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “சீனா கையும் களவுமாக பிடிபட்டுள்ளது. வடகொரியாவுக்கு தாராளமாக பெட்ரோலிய பொருட்கள் கிடைக்க சீனா அனுமதிப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.இதேநிலை நீடித்தால் வடகொரிய விவகாரத்தில் எந்த தீர்வையும் எட்ட முடியாமல் போய்விடும்” என்று தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் ட்ரம்பின் குற்றச்சாட்டை வெள்ளிக்கிழமை சீனா மறுத்துள்ளது.

இதுகுறித்து சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், ஹுவா சுன்யிங் கூறும்போது, “அமெரிக்காவின் அறிக்கை உண்மைக்கு முரணாக உள்ளது. நீங்கள் கூறப்படும் கப்பல் எங்கள் கடல் பகுதிக்கு நுழையவும் இல்லை. வெளியேறவும் இல்லை.

 

வடகொரியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களை சீனா ஏற்று நடைமுறைப்படுத்தியுள்ளது.

 

சீனா ஐ.நா. சபையின் விதிமுறைகளை மீறியதற்கான ஆதாரம் இருந்தால் அதனை சட்ட ரீதியாக எதிர் கொள்ள தயராக இருக்கிறோம்”என்று கூறியுள்ளார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top