நேர் வழியில் செல்லுங்கள், நியாயமான வழியில் செல்லுங்கள் – ரசிகர்களின் சந்திப்பில் ரஜினி பேச்சு

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில், ஐந்தாவது நாளாக ரஜினிகாந்த், இன்று ரசிகர்களைச் சந்தித்தார்.

அவர் மத்திய சென்னை, வடசென்னை மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். 31ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்று பேசினார். குடும்பம், மனைவி, குழந்தைகள் முக்கியம் என்று மறுநாள் பேசினார். காலமும் நேரமும் மாறிக் கொண்டே இருக்கும் என்று நேற்று பேசினார்.

இன்று காலையில் மண்டபத்துக்கு வந்த ரஜினி, ரசிகர்கள் முன்னே பேசியதாவது:

எனக்குள் இருந்த நடிப்புத் திறமையை தெரிந்து கொண்ட முதல் நபர், என் நண்பர் ராஜ்பகதூர். அவர்தான் என்னை முதலில் ஊக்கப்படுத்தினார். முதன்முதலாக, 73ம் வருடம் சென்னைக்கு வந்தேன். அப்போது மெட்ராஸ் என்றுதான் அழைப்பார்கள். கர்நாடகாவில் மெட்ராஸ் பற்றி பெருமையாகப் பேசுவார்கள்.

இங்கே வந்ததும், பாலசந்தர் சார், ‘தமிழைக் கற்றுக் கொள். உன்னை உயர்ந்த இடத்தில் கொண்டு வந்து வைக்கிறேன்’ என்றார். அப்படியே என்னை உயர்த்தியும் காட்டினார். என்னை ஒரு வளர்ப்பு மகனைப் போல பார்த்துப் பார்த்து வளர்த்தார்.

இந்தியாவே என்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தவர் இயக்குநர் ஷங்கர். அவர் இயக்கத்தில் நான் நடித்துள்ள 2.0 திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகிறது. காலா படத்தில் வித்தியாசமான ரஜினியைக் காட்டியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.

நான் உடல்நலமில்லாமல், சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தபோது, ரசிகர் ஒருவர் எழுதிய கடிதம் என்னை கண்கலங்க வைத்துவிட்டது. ‘தலைவா… நீ சினிமாவில் நிறைய நடித்து எங்களைச் சந்தோஷப்படுத்தவேண்டாம். அரசியலில் இறங்கி, எங்களுக்கு நல்லது செய்ய வரவேண்டாம். நீ ஆரோக்கியத்தோடு உயிரோடு இருந்தால் அதுவே போதும் எங்களுக்கு!’ என்று எழுதியிருந்தார். உங்களின் அன்பும் ஆசீர்வாதமும்தான் என் உடல் ஆரோக்கியத்துக்குக் காரணம். உங்களைப் போல் ரசிகர்கள்தான் எனக்கு பலம். எனக்கு சொத்து எல்லாமே! உங்களுக்குள்தான் கடவுள் இருக்கிறார். உங்களை என் கடவுளாகத்தான் பார்க்கிறேன்.

எவ்வளவோ பார்த்துவிட்டேன். கீழேயிருந்து மேலே வரை கடவுள் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். பணம், பேர், புகழ் எல்லாமே கிடைத்திருக்கிறது. கடவுளின் ஆசீர்வாதம். உங்களின் அன்பு.

கனவு காண்பதில் இருக்கும் சந்தோஷம், நனவாகும் போது இருக்காது. கனவு காண்பது சுகமாக இருக்கும். அந்தக் கனவு நனவாகும் போது கூட, நிம்மதியோ சந்தோஷமோ இருக்காது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். காசு, பணம், பேரு, புகழ் அவ்வளவு ஏன்… காதலாகக் கூட இருக்கட்டும். நனவாகும் போது சந்தோஷம் இருக்காது.

அதற்காக கனவு மட்டும் காணுங்கள் என்று சொல்லவில்லை. அந்தக் கனவை நனவாக்க, குறுக்கு வழியில் செல்லாதீர்கள். நேர் வழியில் செல்லுங்கள். நியாயமான வழியில் செல்லுங்கள். தர்மமான வழியில் செல்லுங்கள். குறுக்கு வழியில் சென்றால் நிம்மதி இருக்காது. மக்கள் மதிக்க மாட்டார்கள். முதலில், தனிமையில் உங்களை நீங்களே மதிக்கவேண்டும். அதற்கு உங்கள் சிந்தனையும் செயலும் நேர்மையாக, மதிக்கும்படி இருக்கவேண்டும்.

எனக்குள் இருக்கிற சக்திக்கு, நான் செய்யும் தியானமே காரணம். மெடிடேஷன் காரணம். மெடிசன்… அதில் இருந்து வந்ததுதான் மெடிடேஷன். உடம்பு பலத்துக்கு மருந்து என்றால், மனசு பலத்துக்கு தியானம். நீங்கள் எல்லோரும் தினமும் தியானம் செய்யுங்கள். ஏதேனும் ஓரிடத்தை தேர்வு செய்து அமருங்கள். இடத்தை மாற்றாதீர்கள். தினமும் அதே இடத்தில் ஒரு ஐந்துநிமிடம் கண் மூடி தியானம் செய்யுங்கள். மனம் எங்கெங்கோ அலைபாயும். ஆனால் அடுத்தடுத்த நாட்களில், உங்களுக்குள் மாற்றம் ஏற்படுவதை உணருவீர்கள்.

திரும்பவும் சொல்கிறேன். குடும்பம் முக்கியம். மனைவி குழந்தைகள் முக்கியம். பெற்றவர்கள் முக்கியம். இவர்கள் மதிக்கும் படி நீங்கள் வாழ்வது முக்கியம். முதலில் குடும்பம் மதிக்கணும். அடுத்து உறவுகள் மதிக்கணும். அதையடுத்து சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் மதிக்கணும். இவர்கள் எல்லோரும் மதிக்கும்படி செயல்படவேண்டும் என்று முதலில் நினைத்தாலே போதும். பிறகு அவையெல்லாம் செயலில் வந்துவிடும் என்று பேசினார் ரஜினிகாந்த்.

நாளை 31ம் தேதி, 6ம் நாளாக ரசிகர்களைச் சந்திக்கிறார். அரசியல் நிலைப்பாடு குறித்து நாளைய தினம் அறிவிக்கிறேன் என்று முதல் நாள் சந்திப்பில் அறிவித்திருந்தார். நாளை என்ன சொல்லப்போகிறார் என்று ரசிகர்கள் மட்டுமின்றி, மக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top