அ.தி.மு.க – பா.ஜ.க அரசியல் உறவு: அமைச்சர்களின் மாறுபட்ட கருத்தால் குழப்பம்

பா.ஜ.க.வுடனான அரசியல் கூட்டணி குறித்து தமிழக அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மதுரையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மாநகர அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியது:

ஜெயலலிதாவை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. அவரே ஒருமுறை இதை சொல்லியிருக்கிறார். அப்போது அவர்,‘நாம் ஒரு தடவை தவறு செய்துவிட்டோம். பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டோம். அதற்கான தண்டனையை நாம் பெற்றுள்ளோம். இனிமேல் அதிமுக வரலாற்றில் பாஜக என்கிற கட்சியுடன் ஒட்டோ, உறவுவோ இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதாவே ஒரு காலத்தில் இந்த மதவாத கட்சியுடன் இணைந்து போட்டியிட மனமில்லாதவராகவே இருந்தார். ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை பின்பற்றுவோம்.

ஜிஎஸ்டி, பணமதிப்பு இழப்பு ஆகியவற்றால் மத்திய அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தது. அந்த எதிர்ப்பு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த அதிமுக பக்கம் திரும்பியது. ஆர்.கே.நகர் தொகுதியில் 30 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். பாஜகவை டிடிவி தினகரன் எதிர்த்து பேசியதால் அந்த வாக்குகள் அவருக்கு விழுந்தன.

அதிமுக தோல்விக்கு இந்த ஒரு காரணம் மட்டுமில்லை. சென்றமுறை நாம் டிடிவி தினகரனை ஆதரித்து வாக்கு சேகரித்தோம். இந்த முறை அவரை எதிர்த்தோம். இந்த முரண்பாடும் தோல்விக்கு முக்கிய காரணம்
என்று அவர் பேசினார்.

இதற்கிடையே, விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே கோட்டைபட்டி பகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி:

பாஜக உடன் இணக்கமாக இருந்ததால் தான் இடைத்தேர்தலில் தோற்றோம் என செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார். அது அவரது தனிப்பட்ட கருத்து. வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தோல்வி என்பது ஒரு விபத்து. அது வெற்றியின் படிக்கட்டு.

ரஜினி ஒரு வெகுளி. அரசியலுக்கு வர சித்து விளையாட்டுகள் தெரிய வேண்டும். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றி பெற்றிருப்பார். அவரின் குணத்துக்கும், வயதுக்கும் தற்போது உள்ள அரசியல் சரிப்படாது.

ஒரு இடைத்தேர்தல் வெற்றியை தீர்மானிக்காது, பொதுத் தேர்தல்தான் வெற்றியை தீர்மானிக்கும். திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது என்று நாங்கள் சொன்னால் கேட்கமாட்டீர்கள். தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியே அதை கூறியுள்ளார் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top