மதச் சார்பின்மை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு; அனந்தகுமார் ஹெக்டே பதவி விலகக் கோரி காங்கிரஸ் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

கர்நாடக மாநிலம் குகானூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மந்திரி அனந்த்குமார் ஹெக்டே, ”மதச் சார்பின்மைவாதிகள், முற்போக்காளர்கள் என கூறிகொள்பவர்கள், உண்மையில் தங்கள் பெற்றோர் மற்றும் தங்கள் ரத்தத்தின் அடையாளம் இல்லாதவர்கள். இதுபோன்ற அடையாளம் மூலம்தான் ஒருவர் சுயமரியாதையைப் பெற முடியும். சிலர் தங்களை முஸ்லிம், கிறிஸ்தவர், பிராமணர், லிங்காயத், இந்து என அடையாளப் படுத்திக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் சிலர் மதச்சார்பற்றவர்கள் என கூறும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது” என பேசினார்.

மேலும், அரசியல் சாசனத்தில் மதசார்பற்ற என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அரசியல் சாசனம் பல முறை மாற்றப்பட்டிருக்கிறது என்றார். மதசார்பற்ற என்ற வார்த்தையும் மாற்றப்படும் என்றும் அதை மாற்றுவதற்காகவே தாங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மந்திரியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. நான்கு நாள் விடுமுறைக்கு பின்னர் பாராளுமன்றம் இன்று கூட இருக்கும் நிலையில், மக்களவையில் காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளது.

மக்களவை இன்று காலை கூடியதும், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, மதச் சார்பின்மை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர்.

மதச் சார்பின்மை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேவை பதவியில் இருந்து நீக்கக் கோரி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.

அவை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு மந்திரியின் பேச்சு குறித்து விவாதிக்க வேண்டும் என இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மன்மோகன் சிங் மீதான பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கடந்த வாரம் முழுவதும் அவை அமளியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேயின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுபோல் பாகிஸ்தான் சென்ற குல்பூஷண் ஜாதவின் குடும்பத்தினரை பாகிஸ்தான் அவமானப்படுத்தி விட்டதாக கூறி சிவசேனா எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையில் அமளி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவையை நண்பகல் வரை, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்தி வைத்தார்.

இதுபோலவே, மாநிலங்களவையிலும், இதே பிரச்சினையை காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளியை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top