2ஜி வழக்கு; மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் சிபிஐ ஆலோசனை

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.வின் ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கிய சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆவணங்களை சி.பி.ஐ. தரப்பு தாக்கல் செய்யப்படாததால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏற்கெனவே தெரிவித்து இருந்தன. இதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன், சிபிஐ ஆலோசனையைத் தொடங்கியுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக முதல்கட்டமாக, சிபிஐயின் சட்ட நிபுணர்கள் ஆலோசித்து வருகின்றனர். சிபிஐ தரப்பில் ஆஜராகி சாட்சியம் அளித்தவர்களின் வாதங்கள் சரியாக வைக்கப்படவில்லை என்று கூறப்படுவதால், அதுதொடர்பான சட்ட நிபுணர்களிடம் சிபிஐ தரப்பில் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ”2ஜி வழக்கில் முறைகேடுகள் நடந்ததற்கான முகாந்திரங்கள் இருப்பதாக கருதியதால்தான், கடந்த 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்தது. எனவே, அப்போது நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட சான்றுகளை ஆராய்ந்து வருகிறோம். இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் வாதங்களை தயாரித்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top