சுனாமி நினைவு தினம்: சென்னை மெரினா கடலில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய மீனவர்கள்

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.

அன்று கடலுக்குள் உருவான நில நடுக்கம் ஆழி பேரலை அதாவது சுனாமியாக உருவெடுத்து ஊருக்குள் புகுந்து மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையோரம் வசித்து வந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள். தமிழகத்திலும் சுனாமியின் கோரப்பசிக்கு பலர் இறந்தனர்.

அதன் பிறகுதான் சுனாமி என்பதன் முழு அர்த்தத்தையும் மக்கள் புரிந்து கொண்டனர். இனி ஒரு சுனாமி உலகில் எங்குமே வரக்கூடாது என மக்கள் நினைக்கும் நிலை ஏற்பட்டது.

இயற்கையின் கோர தாண்டவத்தில் தமிழகத்தின் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, குளச்சல் உள்ளிட்ட நகரங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாண்டனர். குமரி மாவட்டத்தில் அரசு அறிவித்த கணக்குப்படி இறந்தவர் எண்ணிக்கை 1,017 பேர். இந்த கோர சம்பவம் நடந்து இன்றோடு 13 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் சுனாமி ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் மறையவில்லை.

இன்று காலை சென்னை நொச்சிக்குப்பத்தில் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்காக கடற்கரையில் 5 நிமிடம் மவுனமாக அமர்ந்து இருந்தனர். சுனாமியில் பலியான தங்களது குடும்பத்தினரை நினைத்து கடற்கரையில் கற்பூரம் மற்றும் மெழுகுவத்தி ஏற்றி கண்ணீர் சிந்தினர். சென்னை மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்ல.

இதையொட்டி கோவளம், நெம்மேலி, சூலேரிக்காடு, தேவநேரி, மாமல்லபுரம், கொக்கிலமேடு, வெண்புரு‌ஷம், சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் போன்ற கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.

அவர்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்று கடலில் ஊற்றியும், மலர்கள் தூவியும் வழிபட்டனர். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி சுனாமியால் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

மீனவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.  சென்னை நொச்சிக்குப்பத்தில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு இன்று அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

2004ம் ஆண்டு சுனாமி எங்களை தாக்கியது. அதில் எங்கள் உறவினர்களை இழந்தோம் அவர்களை எங்கள் முனோர்களாக கருதுகிறோம், அவர்களை நினைவு கூறும் வகையில் அஞ்சலி செலுத்திகிறோம் என்று தெரிவித்தனர்.

மேலும் சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 12 வருடங்களாக சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு காமராஜர் சிலை எதிர்புறம் இல்ல கடற்பகுதியில் நினைவு அஞ்சலி செலுத்துவது வழக்கமாக இருந்து வந்தது. இந்த வருடம் அவர்களுக்கு காமராஜர் சிலை அருகே அனுமதி மறுக்க பட்டு மெரினா நொச்சிக்குப்பத்தில்
நினைவு அஞ்சலி நினைவுகூரப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மீனவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தினர் உள்பட ஏராளமானோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இறந்தவர்களை நினைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து கதறித்துடித்தனர் கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. கடற்கரை பகுதிகளில் எங்கும் அழுகை குரல் கேட்ட வண்ணம் இருந்தது.

13 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி எங்களை சூறையாடியது. இன்று ஒக்கி புயல் வேதனையை தந்துள்ளது. எங்களுக்கு விடிவு காலம் எப்போது? என்பதை இறைவன்தான் கூற வேண்டும் என்றனர்.

குமாரி மாவட்டத்திலும் சுனாமியில் இறந்தவர்களுக்கு நினைவாக உருவாக்கப்பட்ட நினைவுத் தூண் உள்ள பகுதிக்கு சென்று மலர் வளையம் வைத்து கண்ணீர் சிந்தினர்.

சுனாமி நினைவு தினத்தையொட்டி இன்று கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அஞ்சலி செலுத்தினார்.

மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களில் ஏராளமான பெண்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top