இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் தவிர்த்து அ.தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.கள், அமைச்சர்கள் டி.டி.வி. பக்கம் வருவார்கள் – நாஞ்சில் சம்பத்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் பெரும் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.

இதில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, புகழேந்தி ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். 6 மாவட்ட செயலாளர்களின் பதவியும் பறிக்கப்பட்டது.

அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் பற்றி நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் ஒதுக்கி வைத்த போதே நான் கட்சியில் இல்லை. அந்த கும்பலை விட்டு அப்போதே நான் ஒதுங்கிவிட்டேன். எப்போது நான் சசிகலாவையும், டி.டி.வி. தினகரனையும் சந்தித்தேனோ அன்று முதல் நான் அவர்கள் பக்கத்தில் தான் உள்ளேன்.

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கும், ஆளப் போகிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் கட்சிக்கும், இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் கட்சிக்கும் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். இந்த கட்சிகள் அனைத்தும் குக்கரில் வெந்துவிட்டன.

ஜெயலலிதாவை வெற்றி பெற வைத்து முடிசூட்டி அழகு பார்த்த ஆர்.கே.நகர் மக்கள் இப்போது டி.டி.வி. தினகரனை வெற்றிபெற வைத்து உள்ளனர். அவர் மீது மக்கள் கொண்ட அன்பு, நம்பிக்கை காரணமாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. பணம் கொடுத்து நாங்கள் வெற்றிபெறவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியானதும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகியோரை தவிர அங்கிருக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் எங்கள் பக்கம் வருவார்கள்.

இதனால் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தினகரன் முதல்-அமைச்சராக வருவார். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top