அடுத்த ஆண்டில் மேலும் இரு பட்டங்களை வெல்ல எதிர்நோக்கி இருக்கிறேன்: இந்திய வீரர் விஜேந்தர்சிங் பேட்டி

இந்திய வீரர் விஜேந்தர்சிங் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த தொழில்முறை குத்துச்சண்டை பந்தயத்தில் ஆப்பிரிக்க சாம்பியனான கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவை தோற்கடித்து டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல் மற்றும் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் ஆகிய பட்டங்களை தக்கவைத்துக் கொண்டார். தொழில்முறை குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியே சந்திக்காத விஜேந்தர்சிங் தொடர்ச்சியாக ருசித்த 10-வது வெற்றி இதுவாகும்.

பின்னர் 32 வயதான விஜேந்தர்சிங் கூறியதாவது:-

ஆண்டின் இறுதியை வெற்றியுடன் நிறைவு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அமுஜூ கடும் சவால் கொடுப்பார் என்பது தெரியும். அதனால் தான் இந்த பந்தயம் 10-வது ரவுண்ட் வரை நகர்ந்தது. அவரை நாக்-அவுட் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்குமா? என்று பார்த்தேன். ஆனால் தப்பி விட்டார். அவர் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க கூடிய ஒரு குத்துச்சண்டை வீரர் என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். தொடக்க ரவுண்டுகளிலேயே இதை என்னால் உணர முடிந்தது. எனது பயிற்சியாளர் வகுத்து தந்த திட்டங்களின்படி களத்தில் செயல்பட்டதே வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. இந்த நேரத்தில் எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த ஆண்டில் குறைந்தது இரு பட்டங்களுக்காக விளையாடுவதை எதிர்நோக்கி இருக்கிறேன். அதாவது காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் மகுடத்துக்காக களம் இறங்க தயாராக உள்ளேன்.

இங்கிலாந்தின் அமிர் கான் (பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்) தன்னுடன் மோத விஜேந்தர் தயாரா? என்று சவால் விடுத்து இருப்பது குறித்து கேட்கிறீர்கள். அவரும் உலக அளவில் 2 பட்டங்களை வென்று இருக்கிறார். நானும் இரு பட்டங்களை கைப்பற்றி இருக்கிறேன். அதனால் இருவரும் மோதலாம். இருப்பினும் இருவரும் வெவ்வேறு உடல் எடைப்பிரிவுகளில் இருக்கிறோம். ஆனால் வெவ்வேறு எடைப்பிரிவில் உள்ளவர்கள் நேருக்கு நேர் மோதியதை இதற்கு முன்பு பார்த்து இருக்கிறேன். எனவே இதற்கு ஏற்பாடு செய்ய முடியும்.

இவ்வாறு விஜேந்தர்சிங் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top