‘அருவி’ பட இயக்குநர், நாயகிக்கு ரஜினிகாந்த் தங்கச்சங்கிலி பரிசு

டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் படம் ‘அருவி’.

இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அதீதி பாலன் நடித்துள்ளார். படத்தின் இயக்குநருக்கும், நாயகிக்கும், தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், சமீபத்தில் அருவி படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் படக்குழுவை பாராட்டினார்.

படத்தின் இயக்குனர் அருண் பிரபு அவர்களை போனில் தொடர்பு கொண்டு பேசிய ரஜினி, அருவி படம் என்னை சிரிக்க வைத்தது, அழ வைத்தது, யோசிக்க வைத்தது. இந்த படத்தை எடுத்ததற்கு பாராட்டுக்கள். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வருவீர்கள் என்று பாராட்டியிருக்கிறார்.

இயக்குநர் அருண்பிரபுவிடம் ரஜினிகாந்த் பேசும்போது, “அருவி ரொம்ப அறிவுபூர்வமான படம் , சிறந்த படம் , படத்தைப் பார்த்து நான் அழுதேன், நிறைய சிரிக்கவும் செய்தேன். நான் தனியாக படத்தைப் பார்க்கும் போதும்கூட திரையரங்கில் படத்தைப் பார்த்த உணர்வு கிடைச்சுது. மிகப்பெரிய படைப்பு. இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். இந்தப் படத்தை கொடுத்ததற்காக எங்களைப் போன்ற மக்கள் உங்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்” என்று இயக்குநரை பாராட்டினார்.

மேலும், “இந்த கதையை எங்க இருந்து ஆரம்பிச்சிங்க என்றும் கேட்டுள்ளார்?”

அருவி திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல வார்த்தையான “Rolling sir” என்ற வார்த்தை மூன்று முறை படத்தில் வருவது போல் சத்தமாக கூறி மகிழ்ந்துள்ளார்.

அருவி திரைப்படத்தின் நாயகி அதிதியிடம், “உங்க நடிப்பு சூப்பர்… எவ்வளவு வெயிட் லாஸ் பண்ணீங்க” என்று கேட்டு பாராட்டியுள்ளார்.

இறுதியில் உங்களைப் போன்ற ஆட்கள் கண்டிப்பாக நிறைய நாள் சினிமாவில் இருக்க வேண்டும். படத்துக்கு பொங்கல் வரைக்கும் பப்ளிசிட்டி பண்ணுங்கள் என்று கூறியும் வாழ்த்தியுள்ளார்.

பின் இயக்குநர் அருண் பிரபுவுக்கும், அதிதி பாலனுக்கும் தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். இது படக்குழுவுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top