3வது டி-20 கிரிக்கெட்: இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் கொண்ட தொடர்களை இந்தியாவிடம் இழந்தது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டி 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிக்வெலா மற்று உபுல் தரங்கா களமிறங்கினர். இரண்டாவது ஒவரிலேயே உனத்கட்டின் அபாரமான பந்துவீச்சில் டிக்வெலா அவுட்டானார்.

இதையடுத்து, களமிறங்கிய ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. அணைத்து இலங்கை வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில், இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. ஷனகா 24 பந்துகளில் 2 சிக்சருடன் 29 ரன்களுடனும், தனஞ்சயா 11 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் உனத்கட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர். ராகுல் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சமீரா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய ரோகித் 20 பந்துகளில் 27 ரன்கள் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் – மணேஷ் பாண்டே ஜோடி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷ்ரேயாஸ் அய்யர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அதன்பின் களமிறங்கிய பாண்டியாவும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மணிஷ் பாண்டேவும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது டோனியும், தினேஷ் கார்த்திக்கும் களத்தில் இருந்தனர். இந்த ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என வென்று இலங்கை அணியை ஒயிட்-வாஷ் செய்தது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top