தினகரனுக்கு எதிராக களம் கண்ட திமுக, நாம் தமிழர், பாஜக காட்சிகள் உட்பட 57 பேர் டெபாசிட் இழந்தனர்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்தனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

மொத்தம் 1,76,885 வாக்குகள் பதிவாகின. 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று இடைத்தேர்தலில் வாகை சூடியுள்ளார். 50.32% வாக்குகளை அவர் பெற்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றுள்ளார். இவரது வாக்கு சதவீதம் 27.31%. திமுக வாக்கு சதவீதம் 13.94% ஆகும்.

கடந்த 2004-ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியிருப்பது இதுவே முதல் முறையாகும். அதேபோல் 2001-ல் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு சுயேட்சையாக வெற்றி பெற்ற பின்னர் டிடிவி தினகரனே சுயேட்சையாக வெற்றி பெற்றிருக்கிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடந்தபோது அதிமுக வேட்பாளாராக களம் கண்ட ஜெயலலிதா அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனைவிட 39,544 வாக்குகள் அதிகமாகப் பெற்றார்.

தற்போதைய இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளரைவிட 40,707 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார். ஒப்பிட்டுப் பார்த்தால் இது ஜெயலலிதா – சிம்லா முத்துச்சோழன் இடையேயான வாக்குவித்தியாசத்தைவிட அதிகமானதாகும். 1,162 வாக்குகள் டிடிவி அதிகமாகப் பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.

மொத்தம் பதிவான வாக்குகளில் 6% பெறும் கட்சியே டெபாசிட் பெற முடியும். அதாவது 29,480 வாக்குகள் பெற்றால் மட்டுமே திமுக டெபாசிட் பெற முடியும் என்பது நிலைமை. ஆனால், மருதுகணேஷ் 24,581 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில் திமுக டெபாசிட் இழந்துள்ளது.

நாம் தமிழர், பாஜக கட்சிகளும் டெபாசிட் இழந்துள்ளன. நோட்டாவைவிட குறைவான வாக்குகளையே பாஜக பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top