2-வது டி20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்தியா – இலங்கை இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பேரேரா பந்து வீச்சு தேர்வு செய்தார்

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள்.  இந்தியா 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்தது. பவுண்டரி லைன் மிகவும் சிறியதாக இருந்ததால் இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா இலங்கை அணியின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார் இதன் மூலம் அவர் 12-வது ஓவரில் சதம் அடித்தார்.

35 பந்தில் அதிரடி சதம் அடித்து, டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த டேவிட் மில்லரின் சாதனையை சமன் செய்தார். ரோகித் சர்மா 43 பந்தில் 12 பவுண்டரி, 10 சிக்ஸ் உடன் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் – ரோகித் சர்மா ஜோடி 12.4 ஓவரில் 165 ரன்கள் குவித்தது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இது அதிபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.

அடுத்து டோனி களம் இறங்கினார். டோனி – லோகேஷ் ராகுல் இருவரும் சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ராகுல் 49 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த ஹர்திக் பாண்டியா 10 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் ரன்ஏதும் எடுக்காமலும், டோனி 28 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. இந்தியா 21 சிக்சர்கள் விளாசியது.

அடுத்ததாக 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோஷன் டிக்வெல்லாவும், உபுல் தரங்காவும் களமிறங்கினர். டிக்வெல்லா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் உபுல் தரங்காவுடம், குசல் பெரெரா ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன்குவித்தனர். இருவரும் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசினர். பெரெரா அரைசதம் அடித்தார். அரைசதம் அடிப்பார் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தரங்கா 47 ரன்களில் சஹால் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய திசாரா பெரெரா டக் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து குசல் பெரெராவும் 37 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது இலங்கை அணி 14.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள்

அதன்பின் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணியினர் பெவிலியனுக்கு அடுத்தடுத்து அணிவகுத்தனர். 17.2 ஓவர்களில் இலங்கை அணி 172 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன்மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சில் சஹால் 4 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும், உனத்கட், பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி மும்பையில் 24-ம் தேதி நடைபெற உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top