சி.பி.ஐ. மீதான நம்பகத்தன்மை தகர்ந்து போயுள்ளது – திருமாவளவன்

திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. ஏராளமான தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டாலும் அமைதியாக நடந்து முடிந்தது ஆறுதல் அளிக்கிறது.ஆர்.கே. நகர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என தெரியும், நம்புகிறேன்.

2ஜி வழக்கில் யாரும் எதிர்பாராத வகையில், தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தவர்கள் ஏராளம். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. எந்தவித ஆதாரங்களையும் சி.பி.ஐ. சமர்ப்பிக்கவில்லை என்று நீதிபதி சைனி வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதன் மூலம் சி.பி.ஐ. மீதான நம்பகத்தன்மை தகர்ந்து போயுள்ளது.

அரசு கோப்புகளில் இருக்கும் தகவல்களை தனது அதிகார வரம்புகளை மீறி முன்னாள் சி.ஏ.ஜி. வினோத்ராய் வெளியிட்டதால் இந்த தேசத்தின் மீதான நன் மதிப்பை உலக அரங்கில் பாதிப்படைய செய்துள்ளது.தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று அவர் கூற, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் என்று அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய இந்திய அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது. தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் பாதிக்கப்பட்டன. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. தனிப்பட்ட முறையில் தி.மு.க. மீதான நம்பகத்தன்மை தகர்ந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் பொய் வழக்கில் சிறைப்படுத்தப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர்.

தனது அதிகார வரம்பை மீறி அரசு கோப்புகளில் உள்ள தகவல்களை தனது கற்பனைக்கு ஏற்றவாறு வெளியிட்ட முன்னாள் சி.ஏ.ஜி. வினோத்ராய் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும். எந்தவித ஆதாரங்களையும் சமர்ப்பிக்காமல் 7 ஆண்டுகளாக பொய் வழக்கை நடத்திய சி.பி.ஐ. மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் வழக்கு போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.

2ஜி வழக்கில் மேல் முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளார்கள். மேல் முறையீடு என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் கீழமை நீதிமன்றத்தில் என்ன விசாரிக்கப்பட்டதோ அதை தாண்டி புதிதாக ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாது. கீழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் , சாட்சியங்கள் அடிப்படையில் தீர்ப்பில் உள்ள குறைகளை சீராய்வு செய்ய முடியுமோ தவிர, புதிய குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க வாய்ப்பில்லை.

2ஜி வழக்கு தீர்ப்பு மூலம் தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி என்று கூறுவது ஒரு கற்பனையே. அப்படி ஒரு தேவை பா.ஜ.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இருப்பதாக தெரியவில்லை. ஆர்.கே. நகர் தேர்தல் இளம் வாக்காளர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும்.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசு இன்னும் தயங்குகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன மீனவர்களை கூட மீனவர்களே தான் கண்டுபிடிக்கக்கூடிய நிலை உள்ளது. மத்திய- மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக முதல்வர் வலியுறுத்திய ரூ.10 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசுவழங்க வேண்டும். மேலும் குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஜெயலலிதா சிகிச்சை பெறுவது குறித்து தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. நாங்கள் ஜெயலலிதா சிகிச்சை பெறும் இடம் போயஸ் கார்டன் என்று தெரிவித்தோம். ஆனால் அப்பல்லோ மருத்துவமனை இயக்குனர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா சிகிச்சை பெற்றது அப்பல்லோ மருத்துவமனைதான் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் சேரும் போது சுய நினைவிழந்த நிலையில் இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.ஆனால் வீடியோவில் சுயநினைவோடு உள்ளார். இது போன்று பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. எனவே ஜெயலலிதா சிகிச்சை குறித்து அவருடன் உடனிருந்து கவனித்தவர்கள் தான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top