இந்தியா-இலங்கை முதல் டி-20: இந்தியா அபார வெற்றி

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் கொண்ட தொடர்களை இந்தியாவிடம் இழந்தது. இரண்டு டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் முதல் போட்டி கட்டாக் நகரில் நேற்று தொடங்கியது.

கட்டாக்கில் இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் 20-20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர் போட்டி வரலாற்றில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

இந்திய அணி 20 ஓவர்களில் 180 ரன்களை எட்டியது. தோனி 39 ரன்களுடனும், பாண்டே 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி பந்துவீச்சில் மேத்யூஸ், பிரதீப், பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து, 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோஷன் டிக்வெல்லா, உபுல் தரங்கா ஆகியோர் களமிறங்கினர். டிக்வெல்லா 13 ரன்கள் எடுத்து உனத்கட் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக குசல் பெரேரா களமிறங்கினார். தரங்கா 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹால் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். பெரேராவும் 19 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அவர்களை தொடர்ந்து வந்தவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 16 ஓவர்கள் முடிவில் 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

2012-ம் ஆண்டு கொழும்பில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த உலக கோப்பையில் இந்தியா 90 ரன் வித்தியாசத்தில் வென்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித்சர்மா தலைமையிலான அணி அதை முறியடித்து தற்போது சிறந்த நிலையை பெற்று இருக்கிறது.

இதேபோல இலங்கை அணி சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல்லேகலே மைதானத்தில் 85 ரன்னில் தோற்றதே மோசமான நிலையாக இருந்தது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி 22-ம் தேதி நடைபெற உள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top