ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தொடர்ந்து காலியாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, பணப் பட்டுவாடா புகார் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இன்று மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட 59 பேர் களத்தில் உள்ளனர். கடந்த சில தினங்களாக நடைபெற்ற தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின.

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் காலையிலேயே வாக்களிக்க ஆர்வத்துடன் வந்திருந்தனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த தொகுதியில் 1,10,903 ஆண் வாக்காளர்கள், 1,17,232 பெண் வாக்காளர்கள், 99 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,28,234 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 50 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு ‘வெப்’ கேமரா மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

அனைத்து வாக்குசாவடி மையங்களும் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் போலீசார், மற்றும் துணை ராணுவ போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top