தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – தமிழ்நாடு வெதர்மேன்

கடந்த நவம்பர் 30-ந் தேதி ஒக்கி புயல் தாக்கியதற்கு பின் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து குளிர்காலம் தொடங்கி விட்டது. இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர உள்ளது.

இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடலில் வருகிற 25-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

மேலும் குமரி கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே அந்தமான் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து இருப்பது:-

கிழக்குதிசையில் இருந்து காற்று கிளம்பவுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் 21ந்தேதி முதல் 24ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது

வங்காள விரிகுடா கடலில் எந்தவிதமான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைக்கும் இப்போது வாய்ப்பு இல்லை. ஆதலால், இந்த மழையை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் உருவாகும் மழை என நினைக்க வேண்டாம்.

இந்த மழை என்பது கிழக்கில் இருந்து வரும் காற்றால் உருவாகும் மழையாகும். நாளை முதல் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் மழை இருக்கும். பெரும்பாலான கடற்கரைப்பகுதிகளில் நாளையில் இருந்தே மழை தொடங்கிவிடும்.

உள்மாவட்டங்களில் ஒரு நாள் மட்டுமே மழை இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் கடற்கரை பகுதிகளிலேயே அதிகமான மழை இருக்கும்.

சென்னையைப் பொருத்தவரை குறைந்தபட்சம் 2 நாட்களுக்காவது மழை பெய்யக்கூடும். ஆனால், கனமழைக்கோ, மிககனமழைக்கோ வாய்ப்பு இல்லை. மழையை அனுபவியுங்கள். அடுத்த 4 நாட்களுக்கு சென்னையில் இருப்பவர்கள் வெளியே செல்லும் போது, மறக்காமல் ரெயின் கோட், அல்லது குடையை உடன் எடுத்துச் செல்லவும.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top