எப்.ஆர்.டி.ஐ. மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: நிதி மந்திரிக்கு மம்தா கடிதம்

எப்.ஆர்.டி.ஐ. மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்படும்போது, அதனை சரிசெய்வதற்கு விரிவான தீர்வு வழங்குவதற்காக, நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு (எப்.ஆர்.டி.ஐ.) மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதில் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வங்கிகள் திவாலாகிவிட்டால், வாடிக்கையாளர்கள் போட்டு வைத்துள்ள தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற விதி சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்த மசோதாவின் அம்சங்களை ஆராய்ந்து வரும் பாராளுமன்ற கூட்டுக்குழு, மசோதா மீதான தனது அறிக்கையை, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மசோதாவை திரும்ப பெறும்படி மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ஏற்கனவே பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல் ஆகியவற்றால் பொதுமக்கள் கடுமையாக அல்லல்பட்டு வருகின்றனர். மேலும், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எப்.ஆர்.டி.ஐ. மசோதாவை பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்க உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top