தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் அடுத்த இரு வாரங்களுக்கு காற்று சுழற்சி ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. இயல்பை விட மழை குறைவாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்து வருகிறது.

 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது தமிழகத்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியோ, காற்றழுத்த தாழ்வு பகுதியோ நிலவாததால், நிலப்பகுதியை நோக்கி மழை மேகங்கள் வருவது குறைந்துள்ளது. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வாய்ப்புகள் குறைந்து இருந்தாலும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு

அடுத்து வரும் 24 மணி நேரத்தில், வடகிழக்கு பருவமழைக்கே உரித்தான வகையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

 

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் தலா 3 செமீ, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 செமீ, தஞ்சை மாவட்டம் மதுக்கூர், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, நெல்லை மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, நாகை மாவட்டம் ஆணைக்காரன்சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top