குத்துச்சண்டை போட்டியில் விஜேந்தர்சிங்கை நாக்-அவுட் செய்வேன் – கானா வீரர் எர்னெஸ்ட் அமுஜூ

ஜெய்ப்பூர்:

விஜேந்தர்சிங் தனது 10-வது தொழில்முறை குத்துச்சண்டையில் கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவுடன் மல்லுகட்ட இருக்கிறார். இந்த பந்தயம் வருகிற 23-ந்தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது. 34 வயதான எர்னெஸ்ட் அமுஜூ 25 போட்டிகளில் விளையாடி 23-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டவர்.

எர்னெஸ்ட் அமுஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘விஜேந்தர் சிங்கின் பெயரை இப்போது தான் கேள்விப்படுகிறேன். அவரது குத்துச்சண்டையை நான் ஒரு போதும் பார்த்தது கிடையாது. இந்த போட்டிக்காக தினமும் 8 முதல் 10 மணி நேரம் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். களத்தில் விஜேந்தர் எத்தகைய தாக்குதல் தொடுத்தாலும், அதற்கு ஏற்ப நான் ஆயத்தமாக இருப்பேன்.

விஜேந்தர் முதல் தோல்வியை சந்திக்கப் போகிறார். அவரை, அவரது சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் நொறுக்கப்போகிறேன். முதலில், அவரது உடல் தளர்வடையும் வரை சரமாரியான குத்துகளை விடுவேன். அதன் பிறகு ‘நாக்-அவுட்’ செய்து வெளியேற்றுவேன். விஜேந்தருக்கு, என்னை போன்ற வலுவான எதிராளியை சந்தித்த அனுபவம் இதுவரை கிடையாது. இந்த பந்தயத்தின் போது இதை அவர் உணருவார். 3 அல்லது 4-வது ரவுண்டிலேயே அவர் வீழ்வது உறுதி’ என்றார்.

இந்திய தொழில்முறை குத்துச்சண்டை முன்னணி வீரர் விஜேந்தர்சிங் இதுவரை விளையாடியுள்ள 9 பந்தயங்களிலும் வெற்றி பெற்றிருப்பதுடன் டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல் மற்றும் ஆசிய பசிபிக் பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top