தமிழக கவர்னருக்கு எதிராக போராட்டம் மேலும் தீவிரமாகும்: முத்தரசன் கண்டனம்

விழுப்புரம்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தன்னிச்சையாக மாவட்டம் வாரியாக சென்று அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தி வருவது தவறானது. ஜனநாயகத்திற்கு புறம்பான செயல். மாநில சுயாட்சிக்கும் எதிரான செயலாகும். இவ்வாறு ஆய்வு நடத்தி வருவதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கவர்னர் தான் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்ப நடந்துகொள்வது நல்லது. ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்தால் கவர்னருக்கு எதிராக போராட்டம் மேலும் தீவிரமாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலில் சிக்கி காணாமல்போன மீனவர்களை தேடும் பணி போதுமானது அல்ல. அந்த பணியை போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும். மாநில முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டதன்படி கன்னியா குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்து ரூ.2 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும்.

ஆர்.கே. நகரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார். இந்த வெற்றியை தடுக்கும் வகையில் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். அவர்களை தி.மு.க. வினர் பிடித்துக்கொடுத்தால் போலீசார் சமாதானம் பேசி அனுப்பி வைக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top