ஹைட்ரோகார்பன் திட்டம்; தமிழக அரசு பதில் அளிக்க அவகாசம் – பசுமை தீர்ப்பாயம்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நெடுவாசல் பாசன விவசாயிகள் நலச் சங்கம் சார்பில், நெடுவாசல் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர். ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் நெடுவாசல் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று போராடிவருகின்றனர். அது மட்டும் இன்றி ஹைட்ரோகார்பன் திட்டம் ஒட்டுமொத்த காவிரி டெல்டா பகுதியையும் அழித்துவிடும் ஆதலால் இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்று மக்கள் போராடிவருகின்றனர்.

மேலும், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு, தேவையான நீராதாரம் இருக்கிறதா என நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையிலேயே திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான நடிகர் விஷாலும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த அமர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக ஓஎன்ஜிசி மற்றும் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஓஎன்ஜிசி தாக்கல் செய்த பதில் மனுவில் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஓஎன்ஜிசி செயல்படுத்தவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. தமிழக அரசு சார்பில் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.

இந்த மனுக்கள் மீதான விசாரணை அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.எஸ்.நம்பியார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞராக வைகோ ஆஜரானார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் கோரினார். விசாரணையை ஜன.29-க்கு தள்ளி வைத்து உத்தரவிடப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு ஹைட்ரோகார்பன் எடுக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்து போராடிய பேராசிரியர் ஜெயராமன் மற்றும் நெடுவாசல் மக்கள் மீது காவல் துறை வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top