13வது நாளாக தொடரும் போராட்டம்; தமிழக மீனவர்கள் கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டம்

நாகர்கோவில்:

வங்கக்கடலில் உருவான ஒக்கி புயல் கடந்த 30-ந் தேதி கன்னியாகுமரி, கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளை தாக்கி வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது.

பல ஆயிரம் கோடி சொத்துக்களை நாசப்படுத்திய அந்த புயல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த குமரி மாவட்ட மீனவர்களையும் துவம்சம் செய்து விட்டது.

பல மீனவர்களின் படகுகள் சூறாவளி காற்றிலும், ராட்சத அலைகளிலும் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டது. இதனால் படகு கவிழ்ந்து பல மீனவர்கள் உயிரிழந்தனர். ஏராளமான மீனவர்கள் கடலில் மாயமானார்கள் அவர்களின் நிலை என்ன என்று இதுவரை தெரியாது நிலை நீடித்து வருகிறது. சில மீனவர்கள் மராட்டியம், குஜராத், லட்சத் தீவு போன்ற பகுதிகளில் கரை ஒதுங்கினர்.

இதனால் மாயமான மீனவர்களின் கதி என்ன என்று உறுதியாக தெரியாததால் பல மீனவ குடும்பங்கள் கண்ணீரில் மிதக்கிறது. மாயமான மீனவர்களை தேடும் பணியில் மத்திய – மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை, அவர்களை விரைந்து தேடும் படி இன்று 13வது நாளாக மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பத்திரமாக கரை திரும்ப வேண்டும் என்று கடலோர பகுதி மீனவர்கள் பிரார்த்தனையும், போராட்டமும் செய்து வருகிறார்கள்.

தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பத்திரமாக கரை திரும்ப வேண்டும் என்று கடலோர பகுதி மீனவர்கள் பிரார்த்தனையும், போராட்டமும் செய்து வருகிறார்கள்.

மாயமான மீனவர்களை மீட்க கோரி கடலோர மாவட்டங்களில் இன்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது.

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்கியதில் ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.

இதில் நீரோடி, தூத்தூர், சின்னத்துறை மற்றும் குமரி மேற்கு மாவட்ட மீனவ கிராமங்களில் தான் அதிகமான மீனவர்கள் மாயமாகி இருந்தனர். எனவே அப்பகுதி மீனவ அமைப்புகள் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக மாவட்டத்தின் அனைத்து மீனவ கிராமங்களிலும் போராட்டங்கள் நடந்தது. தமிழகத்தின் கடலோர மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குழித்துறையில் ரெயில் மறியல், குளச்சல், மணவாளக்குறிச்சியில் சாலை மறியல் உள்பட பல்வேறு இடங்களில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்தது. நேற்று முட்டம், ராஜாக்கமங்கலம் துறை உள்பட பல்வேறு கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபோல நேற்று பூத்துறையில் ஏராளமான மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடத்தினார்கள். 2 கிலோ மீட்டர் தூரம் வரை அவர்கள் ஊர்வலமாக சென்றனர். இரவிபுத்தன் துறை, தூத்தூர், வள்ளவிளை, நீரோடி, மார்த்தாண்டன் துறை போன்ற இடங்களிலும் இதுபோன்ற ஊர்வலங்கள் நடந்தது.

இன்றும் 5-வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீனவர் போராட்டம் நீடித்தது. இரவிபுத்தன் துறையில் இன்று மீனவர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை ஊர் மக்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பெண்கள் மற்றும், சிறுவர், சிறுமிகள், மாயமான மீனவர்களின் உறவினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மாயமான மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும், பலியான மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். மாயமான மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கதறி அழுதபடி இருந்தனர்.

இதுபோல மார்த்தாண்டம் துறை கிராமத்திலும், நீரோடி மற்றும் மார்த்தாண்டம் துறை மக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

இவர்களும் கண்ணில் கருப்பு துணி கட்டி கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்திலும் ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்றனர்.

மீனவர்கள் விவகாரம் தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் வரை தங்கியிருந்து மீன் பிடித்து திரும்புவார்கள். குறைந்த நாட்களில் கரை திரும்பும் மீனவர்களில் பெரும்பாலானோர் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு உள்ளனர்.

ஆனால் 13 வள்ளங்களில் மீன் பிடிக்கச் சென்ற 35 மீனவர்களும், 43 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 427 மீனவர்கள் என மொத்தம் 462 பேரின் விவரங்கள் இதுவரை தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்க தேடுதல் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாயமான மீனவர்கள் பற்றி கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் செய்யலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து குளச்சலில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசில் மாயமான மீனவர்களின் உறவினர்கள் புகார்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.

நேற்று வரை 20 வழக்குகள் பதிவாகி உள்ளது. நீரோடி, இரவிபுத்தன்துறை, கோடி முனை, தூத்தூர், சின்னத்துறை பகுதிகளைச் சேர்ந்த 139 மீனவர்களை காணவில்லை என்றும், அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் ஒரு சிலர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புகார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றும் ஏராளமானோர் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

புகார்கள் பதிவான பின்னே இன்னும் எத்தனை மீனவர்கள் மாயமாகி உள்ளனர் என்ற முழுவிவரம் தெரியவரும்.

நெல்லை மாவட்டத்திலும் மீனவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பல நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையில் புனித லூர்து மாதா ஆலயம் முன்பிருந்து ஏராளமான மீனவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு அப்பகுதி முழுவதும் சுற்றி வந்தனர். திசையன்விளை அருகில் உள்ள கூடுதாழையில் குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக கூடுதாழை புனித தோமையர் ஆலயம் முன்பு பங்குத் தந்தை ஜெகதீஸ் அடிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி அனைத்து கத்தோலிக்க மீனவ நல கூட்டமைப்பு சார்பில் தெற்கு பீச் ரோடு பனிமயமாதா ஆலயம் அருகே நேற்று மாலை இரங்கல் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமேசுவரம், தங்கச்சி மடத்தில் நேற்று மீனவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.

சவேரியார் ஆலயத்தில் இருந்து குழந்தை ஏசு ஆலயம் வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் மீனவப்பெண்கள், குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கன்னியாகுமரியில் தங்கி மீன்பிடிப்பதற்காக சென்றனர்.

ஒக்கி புயலில் சிக்கிய அந்த மீனவர்களில் 12 பேர் இதுவரை கரை திரும்பவில்லை. இதனால் அவர்கள் கதி என்ன? என்று தெரியாமல் கவலையில் உள்ளனர்.

மாயமான அந்த மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் நம்பியார்நகர் சமுதாயக்கூடத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் இன்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். சமுதாய கூடத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நம்பியார் நகரை சேர்ந்த மீனவ கிராம மக்கள் இன்று காலை 8 மணியளவில் கடலில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். இதில் நம்பியார் நகர், அக்கரைபேட்டை பகுதிகளை மீனவர்களும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து நாகை நம்பியார் நகரை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் ஊர்வலமாக நாகை கலெக்டர் அலுவலகம் நோக்கி இன்று காலை வந்தனர்.

பின்னர் அவர்கள் கலெக் டர் அலுவலக வளாகத்தில் திடீரென அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு ஒப்பாரி வைத்து அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பெண்கள், புயலில் சிக்கி மாயமான நாகை மீனவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. மத்திய-மாநில அரசுகள் இதுவரை மீட்பு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மாயமான மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை நாங்கள் யாரும் வீட்டுக்கு செல்ல மாட்டோம்’ என்று ஆவேசத்துடன் கூறினர்.

கடலூர் முதுநகர் மணி கூண்டு அருகே தமிழ்நாடு மீனவர் பேரவை சங்கத்தினர், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை திரண்டனர். அவர்கள் ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தர வேண்டும், இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழவேற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள லைட் அவுஸ் குப்பம், வைரவன் குப்பம், காட்டாங்குப்பம், கரிமணல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று காலை கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர்.

டைட்அவுஸ் குப்பத்தில் இருந்து அவர்கள் ஊர்வலமாக பழவேற்காட்டுக்கு வந்தனர். அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். அவர்கள் பழவேற்காடு பஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் பெண்கள் உள்பட சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து அருகில் வசிக்கும் மீனவ கிராமத்தில் உள்ள பொது மக்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். மீனவர்களின் இந்த போராட்டத்தை அடுத்து பழவேற்காட்டில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top