ஜம்மு-காஷ்மீர் மற்றும் மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா-சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் இன்று அதிகாலை 4:28 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கிழக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினர். இந்த நிலநடுக்கத்தினால் உயிர்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்று உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

நேற்று இரவும் இதே பகுதியில் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மேகாலயா மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 என பதிவாகியுள்ளதாக இந்திய புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top