ஒக்கி புயல்: மாயமானவர்களை மீட்கக்கோரி கூத்தங்குழியில் 12-வது நாளாக மீனவர்கள் போராட்டம்

வள்ளியூர்:

கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் ஏராளமானோர் ஒக்கி புயலில் சிக்கி மாயமானார்கள். காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர கோரி குமரி மாவட்டத்தில் மீனவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இதை தொடர்ந்து, நெல்லை மாவட்டத்திலும் மீனவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பல நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடங்குளம், இடிந்தகரையில் புனித லூர்து மாதா ஆலயம் முன்பிருந்து ஏராளமான மீனவர்கள் ஊர்வலமாக சென்று மாயமான மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர்.

திசையன்விளை அருகில் உள்ள கூடுதாழையில் குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக கூடுதாழை புனித தோமையர் ஆலயம் முன்பு பங்குத்தந்தை ஜெகதீஸ் அடிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சமூக ஆர்வலர் ராஜரீகம் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மீனவர்கள் பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டனர்.

இதில் புயலினால் இறந்து போன குமரி மாவட்ட மீனவர்களை விரைந்து காப்பாற்ற வேண்டும், மேலும் அவர்களுக்கு குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சமும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும் அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூடுதாழை மீனவ பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒக்கி புயலில் சிக்கியவர்களை மீட்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கூத்தங்குழி மீனவர்கள் குடும்பத்தினருடன் கடலில் இறங்கி 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 12-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், ‘ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்கள் அனைவரையும் மீட்கும் வரையில் எங்களது போராட்டம் தொடரும்’ என்றனர்.
தூத்துக்குடி அனைத்து கத்தோலிக்க மீனவ நல கூட்டமைப்பு சார்பில் தெற்கு பீச் ரோடு பனிமயமாதா ஆலயம் அருகே நேற்று மாலை இரங்கல் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பெனோவென்சர் ரோச் தலைமை தாங்கினார். பாதிரியார் தனிஸ்லாஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் குமரி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது காணாமல் போன மீனவர்களை மீட்க தேடுதலை தீவிரப்படுத்த வேண்டும். முதல்-அமைச்சர் நேரில் வந்து மக்களை சந்தித்தால் மட்டுமே புயலின் முழு சேதத்தையும், மீனவ மக்களின் இழப்புகளையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க முடியும்.

மீனவ மக்களுக்கு அறிவித்த நிவாரணங்கள் அவர்கள் பட்ட துயரங்கள் அடிப்படையில் ஏற்புடையதாக இல்லை. முதல்-அமைச்சர் நிவாரணங்களை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top