ஒக்கி புயலால் தமிழகத்தில் ரூ.1000 கோடி சேதம்

நாகர்கோவில்:

கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது.

ஒக்கி புயலால் குமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் சேதங்கள் ஏற்பட்டது.

கடலுக்கு சென்ற ஏராளமான மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி மாயமானார்கள். இன்னும் அதிகாரப்பூர்வ பாலி எண்ணிக்கை அரசு தெரிவிக்காத நிலை உள்ளது. மாயமான மீனவர்களை மீட்க கோரி கன்னியாகுமரி மீனவ கிராமங்களில் மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், லட்சக்கணக்கான வாழைகள், ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளும் சேதம் அடைந்தது. இதுபோல கடற்கரை கிராமங்களில் மீனவர்களின் படகுகள் மீன் பிடி உபகரணங்கள் அனைத்தும் உடைந்து நாசமானது.

இந்த பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குமரி மாவட்டம் வந்தனர். கடந்த 5 நாட்களுக்கும் மேலாக குமரி மாவட்டத்தில் முகாமிட்டு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் குமரி மாவட்டத்தில் மட்டும் ரூ.170 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மூத்த அதிகாரி ஒருவர் தமிழகத்தில் ஒக்கி புயலால் ரூ.1000 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று கூறி உள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தென் மாவட்டங்களை ஒக்கி புயல் கடுமையாக பாதித்துள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கி விட்டது. இதுவரை ரூ.100 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்துக்கு மட்டும் ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த பணம் மூலம் ஒக்கி புயலில் மரணம் அடைந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. உடைந்த மின் கம்பங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை சீரமைக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடற்கரை கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கு இணையாக மாவட்டத்தின் மலைக்கிராமங்களிலும் பயிர்கள் நாசமாகி உள்ளது. ஏராளமான விவசாயிகள் பயிர் நிலங்களை, மரங்களை இழந்துள்ளனர். இவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். இதுபோல பொதுப்பணித்துறையால் சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும். மின் வினியோகத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.

இந்த பணிகள் மழை காலம் முடிந்தபின்பே மேற்கொள்ள முடியும். இவற்றிற்கும், தென்மாவட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் ரூ.1000 கோடிக்கு மேல் செலவாகும். இந்த தொகையினை தமிழகத்தின் பேரிடர் இழப்புத்துறை மூலம் ஈடுகட்ட முடியாது. மத்திய அரசின் நிவாரண நிதி உதவி மூலம் மட்டுமே ஈடுகட்ட முடியும். இதற்காக புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி பெற வேண்டும்.

மத்திய அரசு அளிக்கும் நிதி இங்கு ஏற்பட்ட இழப்புகளுக்கான முழு தொகையும் அளிக்காது. என்றாலும் தமிழகம் போன்றே கடனில் தத்தளிக்கும் தமிழகத்துக்கு மத்திய அரசின் நிதி பேருதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே பாராளுமன்ற துணை தலைவர் தம்பித்துரை டெல்லியில் நிதி மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து தமிழக புயல் பாதிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் புயல் பாதிப்பால் ஏற்பட்ட இழப்புக்கு மத்திய அரசு உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் குமரி மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் சென்று பார்வையிடுவார் எனவும் அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top