மீனவர்களை மீட்கக்கோரி குமரியில் போராட்டம்; 7 ஆயிரம் மீனவர்கள் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில்:

ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். இறந்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

குளச்சல் அண்ணா சிலை முன்பு நடந்த போராட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த 9 மீனவ கிராம மக்கள் பங்கேற்றனர். காலை தொடங்கிய இந்த போராட்டம் மாலை வரை நீடித்தது.

போராட்டக்காரர்களிடம் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக்குழு இயக்குனர் ஸ்டீபன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போராட்டக்காரர்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவதாக அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நாளை 10-ந்தேதிக்குள் கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவதாக மக்கள் தெரிவித்தனர்.

மீனவர்கள் போராட்டம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குளச்சல் வட்டார முதல்வர் கர்பாசியஸ், பங்குத் தந்தைகள் மரியவின்சென்ட் எட்வின், சகாய செல்வின், வின்சென்ட், ஸ்டீபன் ஹென்றி, கஸ்பார், ஆன்டோ உள்பட 23 பேர் மீதும் மற்றும் கண்டால் தெரியும் பல ஆண்கள் மற்றும் பெண்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், குளச்சல் பஸ் நிலையம் முன்பும் மறியல் செய்ததாக கூறி மீனவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேங்காய்பட்டணம் சந்திப்பில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தேங்காய்பட்டணம் கிராம நிர்வாக அதிகாரி அலெக்சாண்டர் கொடுத்த புகாரின் பேரில் முருகன்காந்தி, உதயகுமார், பங்குத்தந்தைகள் செல்வன், ஜிம்மேத்யூ, அன்பரசு, ஹர்பில், செல்வராஜ், கிறிஸ்துராஜ், கிறிஸ்டின் பெர்னிபாஸ் உள்பட கண்டால் தெரியும் 3 ஆயிரம் ஆண்கள் மற்றும் 500 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மணவாளக்குறிச்சி பாலத்தில் மறியலில் ஈடுபட்டதாக கடியப்பட்டினம் பங்குத்தந்தை கிங்ஸ்லிஜோண் உள்பட 600 பேர் மீதும் மணவாளக்குறிச்சி சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட சின்னவிளை பங்குத்தந்தை ஜோசப், பெரியவிளை பங்குத்தந்தை கிளாரட் உள்பட 702 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழித்துறை ரெயில் நிலையத்தில் நீரோடி, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை உள்பட 8 கிராம மக்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீரோடி பங்குத்தந்தை லூசியான், பூத்துறை பங்குத்தந்தை ஜெஸ்டஸ் உள்பட 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீனவர்களை விரைந்து மீட்கக்கோரி போராடிய மீனவ கிராம மக்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top