மாயமான மீனவர்களை மீட்கக் கோரி சென்னையில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டம்

சென்னை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்ற 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒக்கி புயலில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஏராளமானோர் இன்னும் வீடு திரும்பவில்லை.

இந்த மீனவர்கள் லட்சத்தீவு, மும்பை, குஜராத் உள்பட பல இடங்களில் கரை ஒதுங்கியதாக கூறப்பட்டாலும், அவர்களில் பலரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மாயமான மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வலியுறுத்தியும், பலியான மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து குமாரி மாவட்ட மீனவர்கள் குழித்துறை ரெயில் நிலையத்தில் நேற்று 12 மணி நேர மறியல் போராட்டம் நடத்தினார்கள். இன்றும் அங்கு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

புயலில் சிக்கி பலியான மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து மீட்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 25 கிராம மீனவர்கள் மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் நொச்சிக்குப்பத்தில் இருந்து இன்று காலை கோட்டை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்திருந்தனர்.

இதற்காக காலையிலேயே கலங்கரை விளக்கம் அருகே மீனவர்கள் திரண்டனர். ஆனால் போலீசார் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை.

இங்கிருந்து பேரணிக்கு அனுமதியில்லை. சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இடம் உள்ளது. அங்கு செல்லலாம். உங்களை அரசு பஸ்சில் அங்கு அழைத்து செல்கிறோம் என்றனர். அதன்படி அங்கிருந்த மீனவர்களை போலீசார் பஸ்களில் ஏற்றி சேப்பாக்கத்தில் இறக்கி விட்டனர். அங்கு மீனவர்கள் தர்ணா- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் மெரீனா கடற்கரையில் நுழைந்து போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக கடற்கரையில் தடுப்பு அமைத்து போலீசார் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மீண்டும் ஒரு போராட்டம் உருவாகி விடக்கூடாது என்பதால் மெரீனா கடற்கரையில் பொதுமக்களையும் இன்று அனுமதிக்கவில்லை. கடற்கரை சாலையில் வழி நெடுக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top