கடலில் மயமான மீனவர்களை மீட்கக்கோரி 25 ஆயிரம் பேர் பேரணி

குழித்துறை:

கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது.

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் வீசியபோது கடலுக்கு சென்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சூறாவளியில் சிக்கி மாயமாகி விட்டனர்.

குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களின் படகுகளும் மாயமாகி விட்டது.

இதுபற்றி மீனவ அமைப்பினர் கூறும்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்றவர்களில் ஒக்கி புயலில் சிக்கி 254 படகுகள் கரை திரும்பவில்லை. இதில் மீன்பிடிக்கச் சென்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மாயமான மீனவர்களை இந்திய கடற்படை, கடலோர காவல்படை வீரர்கள் தேடி வந்தனர். இதில் மராட்டியம், கோவா, குஜராத் மற்றும் லட்சத்தீவுகளில் குமரி மீனவர்களின் படகுகள் கரை ஒதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருந்த போதும் மத்திய, மாநில அரசுகள் கடலில் மயமான மீனவர்களை தேடும் பணியில் சீராக செயல் படவில்லை என்றும் விரைந்து தேடுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். இறந்து போன மீனவர்களின் எண்ணிக்கை அரசு மறைத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுபோல கேரள கடல் பகுதியில் இறந்து போன மீனவர்களின் உடல்களும் கரை ஒதுங்கியது தெரியவந்தது. இதுவரை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்களின் உடல்களும், தூத்துக்குடி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

ஆனால் புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. உயிர் தப்பிய மீனவர்கள் பலரும் இதனை உறுதி செய்து வருகிறார்கள். தங்களோடு படகில் வந்த பலரும் கண் முன்பு கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்கள் மூலம் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று மீனவ அமைப்பினர் கூறுகிறார்கள்.

ஆனால் மாயமான மீனவர்கள் பற்றி அரசு தெரிவிக்கும் தகவல்களில் முரண்பாடு இருப்பதாக மீனவர்கள் கூறினர். எனவே ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆய்வு முடிந்த பின்பே மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

அண்டை மாநிலமான கேரளாவில் ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணியும், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

பலியான மீனவர் குடும்பத்திற்கு கேரள அரசு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்குகிறது. இதுபோல தமிழக அரசும் நிவாரண நிதி வழங்க வேண்டும், மாயமான மீனவர்களை தேடும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படவில்லை அவர்களை தேடும் பணியில் விரைந்து செயலாற்ற வேண்டும், கடலில் மீனவர்கள் மயமானதற்கும் இறந்துபோனதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று தெரிவித்து மிடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மீனவ அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனை வலியுறுத்தி இன்று குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி ஆகிய 8 மீனவ கிராம மக்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் இன்று சின்னத்துறையில் இருந்து மார்த்தாண்டத்தை அடுத்த குழித்துறை நோக்கி நடை பயணம் தொடங்கினர். நித்திரவிளை, நடைகாவு, புதுக்கடை வழியாக குழித்துறை சென்று அங்கு ரெயில் நிலையத்தை முற்றுகையிட போவதாகவும் அறிவித்தனர்.

இதில், மேற்கு மாவட்ட கடற்கரை கிராமமக்கள், பெண்கள், மாயமான மீனவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிரியார்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

அவர்கள் கைகளில் கருப்புக் கொடி ஏந்தியபடி, மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும், பலியான மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இறந்தவர் குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மீனவர்கள் இறப்பிற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம், மீனவர்களை தேடும் பணியை விரைந்து செயல்பாடு, மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஹெலிகாப்டர்கள், அதிவேக போர்க்கப்பல்களை பயன்படுத்தி, மீட்புப் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

மீனவர்களின் திடீர் போராட்டம் குறித்த தகவல் அறிந்ததும், மார்த்தாண்டம், குழித்துறை மற்றும் கடற்கரை கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க குழித்துறை ரெயில் நிலையத்திலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top