பாபர் மசூதி வழக்கு விசாரணை; பிப்.8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி:

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி சர்ச்சை தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமர் பிறந்த இடம் – பாபர் மசூதி தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு, சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லீலா ஆகிய மூன்று அமைப்புகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மூன்று தரப்பினரும் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், ஷியா மத்திய வக்பு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலை கட்டிக் கொள்ளலாம். பாபர் மசூதியை நியாயமான தூரத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கட்டிக் கொள்ள சம்மதிக்கிறோம்’ என்று தெரிவித்தது. இதற்கு சன்னி மத்திய வக்பு வாரியம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வு முன், இறுதி விசாரணை இன்று தொடங்கியுள்ளது.

மூத்த வழக்கறிஞர்கள் பராசரன், வைத்யநாதன் உள்ளிட்டோர் ராம் லாலா அமைப்பு சார்பில் ஆஜராகின்றனர். வழக்கறிஞர்கள் கபில் சிபல், அனூப் ஜார்ஜ் உள்ளிடோர் ஆஜராகின்றனர். உத்தரப் பிரதேச அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகிறார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் விசாரணையில், சுமார் 19,590 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை மூன்று நீதிபதிகள் அமர்வு முன் அரசு சொசிலிட்டர் தாக்கல் செய்தார்.

சன்னி வக்பு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், குறுகிய காலகட்டத்தில் இத்தனை பக்க ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த வழக்கை 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகே விசாரிக்க வேண்டும் என கபில் சிபில் கூறினார். ஆனால், இதற்கு உ.பி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். தினமும் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

தற்போது, மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், பெரிய நீதிமன்ற அமர்வு அதாவது குறைந்தது 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என கபில் சிபில், ராஜிவ் தாவான் மற்றும் மற்ற மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறினர்.

வாதங்கள் முடிவடைந்த நிலையில், இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top