தன் மீது உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, ஆதாரமற்றவை – விஜய் மல்லையா

லண்டன்,

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.

தப்பி ஓடி வந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என மத்திய அரசு சார்பில் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவரை இந்தியாவுக்கு திருப்ப கொண்டு வருவது தொடர்பான விசாரணை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது.

இந்தியாவிலிருந்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் 4 பேரடங்கிய குழு லண்டன் சென்று, சிபிஐ சார்பில் 2,000 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் இந்திய வங்கிகளில் கடன் பெற்று அவற்றை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாகவும், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காகப் பெறப்பட்ட கடன் தொகையை வேறு வகையில் செலவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் விஜய் மல்லையா சார்பில் வழக்கறிஞர் கிளேர் மான்ட்கோமெரி ஆஜராகி அவர் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

வழக்கு விசாரணைக்காக லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர் ஆகி இருந்தார்:-

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை என்று அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறினார். 1992-ம் ஆண்டிலிருந்து தாம் இங்கிலாந்தில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டார். தன்மீது போடப்பட்ட வழக்குகள் தவறானவை என்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் பல சந்தர்ப்பங்களில் தான் கூறிவருவதாகவும் இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணையில் முடிவெடுக்கும் நிலையில் தான் இல்லை என்றும் நீதிமன்ற நடைமுறை, விதிமுறைகள் படிசெயல்படப் போவதாகத் தெரிவித்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top