விஷால் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்: தயாரிப்பாளர்கள் போராட்டம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக இரு தினங்களுக்கு முன் நடிகர் விஷால் அறிவித்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் நடிகர் விஷால், நடிகர் சங்கத்திலும் பொதுச்செயலாளராக பதவி வகிக்கிறார். அவர் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் டைரக்டரும் தயாரிப்பாளருமான சேரன் தலைமையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகம் முன்னால் நேற்று திரண்டனர். விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

போராட்டம் நடத்துவது குறித்து டைரக்டர் சேரன், நிருபர்களிடம் கூறியதாவது:-

“விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது அதிர்ச்சியளிக்கிறது. திரைப்படங்களுக்கு மானியம் பெறுதல், டிக்கெட் கட்டணம் நிர்ணயம், திருட்டு வி.சி.டி. ஒழிப்பு, கேபிள் டி.வி.யில் படங்கள் ஒளிபரப்புதல் உள்ளிட்ட பல பிரச்சினகளில் தயாரிப்பாளர்கள் சங்கம் அரசை சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது.

விஷால் தேர்தலில் நிற்பதால் அனைத்து கட்சிகள் எதிர்ப்பை அவர் சம்பாதிக்க வேண்டியது வரும். இதனால் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தயாரிப்பாளர்களை நம்பி உள்ள 24 சங்கங்களின் தொழிலாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோரும் பாதிக்கப்படுவார்கள்.

விஷால் தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. தேர்தலில் போட்டியிடும் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அதுவரை சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம்”

இவ்வாறு சேரன் கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top