சென்னை, வட தமிழகத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

 

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, சற்று நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அது மேலும் வலுவடைந்து இன்று அல்லது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னமாக) மாறி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரும்.

 

இந்த நகர்வினால் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

 

நேற்று(நேற்று முன்தினம்) தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று(நேற்று) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

 

7–ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரும் என்பதால் டிசம்பர் 5–ந் தேதி முதல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதி மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

 

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் (இன்று), தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில், ஓரிரு முறை லேசான மழை பெய்யும்.

 

தற்போது தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களிலும், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களிலும், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் உள் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

நாளை 5–ந் தேதி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.

6–ந் தேதியை பொறுத்தமட்டில், கடலோர தமிழகம், புதுச்சேரியில் சிற்சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

7–ந் தேதி தமிழகத்திலும், புதுச்சேரியிலும் சிற்சில இடங்களில் பலத்த மழையோ, மிக பலத்த மழையோ பெய்யலாம்.

சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறுகிறது.

 

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், திருவாரூரில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. குடவாசலில் 13 செ.மீ., வலங்கைமான், நன்னிலம் பகுதிகளில் 12 செ.மீ., நாகையில் 11 செ.மீ., கும்பகோணம், காரைக்கால் பகுதிகளில் 9 செ.மீ., திருத்துறைப்பூண்டி, ஆடுதுறை, திருவாடனை உள்ளிட்ட பகுதிகளில் 8 செ.மீ., திருவிடைமருதூரில் 7 செ.மீ., தேவகோட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை பகுதிகளில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

கோவிலாங்குளம், செந்துறை, தரங்கம்பாடி, குன்னூர் பகுதிகளில் 4 செ.மீ., ஜெயங்கொண்டம், பாபநாசம், நத்தம், திருவையாறு, மன்னார்குடி, சிதம்பரம், பேச்சிப்பாறை, கோத்தகிரி, சேத்தியாதோப்பு, பழனி பகுதிகளில் 3 செ.மீ., பரங்கிப்பேட்டை, சீர்காழி, விருத்தாசலம், திருச்செந்தூர், ஆனைக்காரன்சத்திரம், காரைக்குடி, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 2 செ.மீ., அரியலூர், தக்கலை, மேட்டுப்பாளையம், ஏற்காடு, பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, உதகமண்டலம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top