தமிழக அரசு மெத்தனம்;கடலூர் மாவட்ட மீனவர்களின் கதி என்ன? விவசாயிகள் கவலை

 

கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் தொழில் ரீதியாக மிகவும் பாதிப்படைந்து உள்ளனர். கடலில் மீன்பாடு இல்லாததால் கூலிவேலைக்கு தினசரி சென்று வருகின்றனர்.

 

இந்த நிலையில் கடலூர் மாவட்ட மீனவர்கள் தினக்கூலி அடிப்படையில் மீன்பிடி தொழிலுக்காக கேரளா சென்று, அங்கிருந்து கடலில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். இதேபோல் 10 நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ‘ஒகி’ புயலில் சிக்கினர். இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. தமிழக அரசு இது குறித்து அக்கறை கொள்ளவில்லை.  இதனால் மீனவ கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். இதனிடையே, ஒகி புயலில் சிக்கிய கடலூர் மாவட்ட மீனவர்கள் 8 பேர் பத்திரமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மீதமுள்ள 13 மீனவர்களின் கதி என்ன? என்பது பற்றி தகவல் கேட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. காட்டுமன்னார்கோவிலில் மழைக்கு 44 வீடுகள் சேதமடைந்தன. பசுமாடு, 3 கன்றுகுட்டிகள் உயிரிழந்தன. மணவாய்க்கால் ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீரநத்தம்நெடுங்கூர்-விளங்கல் சாலையை மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் ஏற்கனவே பெய்த மழையால் கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றில் இருகரையையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்தது. மழை மற்றும் நீர்வரத்தால் சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கம், புதுவை மாநிலம் மடுகரை பகுதியை ஒட்டி ஓடும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top