உயிருள்ள குழந்தையை இறந்ததாக கூறிய தனியார் மருத்துவமனை: டெல்லி போலீஸார் வழக்கு பதிவு

புதுடெல்லி:

உயிருள்ள குழந்தையை இறந்ததாக அறிவித்த டெல்லி தனியார் மருத்துவமனைக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த ஆசிஷ் (26) என்பவரின் மனைவி வர்ஷா (20). 6 மாத கர்ப்பிணியாக இருந்த வர்ஷாவின் வயிற்றில் 2 குழந்தைகள் இருப்பது தெரிந்தது. திடீரென கடந்த வாரம் இவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள மேக்ஸ் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைகளை காப்பாற்றுவதற்கு ரூ.35 ஆயிரம் மதிப்பில் 3 ஊசிகள் போட வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வர்ஷாவுக்கு அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது.

இங்கு கடந்த 30-ம் தேதி வர்ஷா பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். இரட்டை குழந்தைகள் பிறக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு குழந்தை இறந்து பிறந்தது. பிறந்த இன்னொரு குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

மேலும் உயிருடன் உள்ள 6 மாத குழந்தையை பராமரிக்க ரூ.50 லட்சம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆசிஷ் தனது குடும்பத்தாருடன் ஆலோசித்தபோது, பகல் 1 மணி அளவில் முதலில் பிறந்த குழந்தையும் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்து, இரண்டு குழந்தைகளையும் பாலிதீன் கவரில் சுற்றி ஒப்படைத்துள்ளனர். அவற்றை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றபோது பாலிதீன் கவர் அசைவதை ஆசிஷ் பார்த்துள்ளார்.

அருகில் உள்ள வேறொரு மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட, முதலில் பிறந்த குழந்தை உயிரோடு இருப்பது தெரிந்தது. உயிருள்ள குழந்தையை இறந்துவிட்டது என தவறாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம் மீது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீஸ் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. டெல்லி அரசும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், உயிருள்ள குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக இரண்டு டாக்டர்களை வேலையில் இருந்து நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

உயிருள்ள குழந்தையை இறந்ததாக கூறிய டாக்டர்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனாலும், டாக்டர்கள் மேத்தா மற்றும் விஷால் குப்தா ஆகியோரை வேலையில் இருந்து நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளோம். மேலும், இந்திய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த இரண்டு டாக்டர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top