நாகை-காரைக்கால் மீனவர்கள் 20 பேர் கைது : இலங்கை கடற்படை அத்துமீறல்

வேதாரண்யம்:

கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மீன்பிடி சீசனையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து மீனவர்கள் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தங்கியிருந்து மீன் பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி நாகை அக்கரை பேட்டையை சேர்ந்த தங்கமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்களும், இன்னொரு விசைப்படகில் காரைக்காலை சேர்ந்த 10 மீனவர்களும் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை 2 மணி அளவில் பருத்திதுறை பகுதியில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 2 படகுகளையும் சுற்றி வளைத்து 20 மீனவர்களையும் கைது செய்தனர். எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி அவர்களை காங்கேசன் துறை முகத்துக்ககு அழைத்து சென்றனர். அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்திய 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

இன்று காலை மீனர்வர்களின் உறவினர்களுக்கு இது குறித்து தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கடலோர காவல்படை போலீசாரிடம் முறையிட்டு தங்கள் குடும்பத்தினரை மீட்டு தரும்படி கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர்.

நாகை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சில நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இயற்கை சீற்றங்களை தாண்டி வருமானத்துக்காக மீன் பிடிக்க செல்லும் மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களை தாக்குவதும் அடிக்கடி நடந்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைதான மீனவர்களை மீட்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top