கன்னியாகுமரி கடும் சேதம்; தென்மாவட்டங்களில் புயல்-மழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று நேற்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘ஒகி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல்-மழை கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. பலத்த மழையும் கொட்டியது இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் நள்ளிரவில் இருந்தே மின்தடை ஏற்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.சுமார் 845 பேர் தாழ்வான பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு இடம் மாற்றப்பட்டனர்.

விடிய விடிய கொட்டிய மழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. நாகர்கோவில் நேற்று காலையில் இருந்தே பஸ் போக்குவரத்து தடைபட்டது. பல இடங்களில் செல்போன் கோபுரங்கள் சேதம் அடைந்ததால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சூறைக்காற்று மற்றும் கனமழையால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பலர் பணிக்கு செல்லவில்லை.

ரெயில் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் கிடந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர், போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டனர்.

இதுபோல் பளுகல் பகுதியில் வீட்டின் மீது மரம் சாய்ந்ததில் தூங்கிக்கொண்டிருந்த அலெக்சாண்டர் (60) என்பவர் பரிதாபமாக இறந்தார். மண்டைக்காடு பகுதியை சேர்ந்த சரஸ்வதி (60) என்பவர் வீட்டுக்கு வெளியே குளித்துக் கொண்டிருந்தபோது அவர் மீது மரம் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பால்கிணற்றான் விளையை சேர்ந்த குமரேசன் என்பவரும் நேற்று மரம் விழுந்து பலி ஆனார்.

மீட்பு பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 70 வீரர்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதனால் 4 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. நாகை மாவட்டத்தில் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ராம நாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து உள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top