‘மனைவிக்கு கணவன் பாதுகாவலன் அல்ல’: உச்ச நீதிமன்றம்

செய்திக் கட்டுரை 

 

நாட்டை திரும்பி பார்க்க வைத்த வழக்குகளில் ஒன்று கேரளா மாநிலத்தை சேர்ந்த ஹாதிய என்ற அகிலா வழக்கு.இந்த வழக்கில் நீதிமன்றத்தின் நடவடிக்கை மக்களுக்கு ஒரு பயத்தை உருவாக்கி இருக்கிறது.அது கேரளா உயர்நீதிமன்றம் என்றாலும் சரி ,உச்ச நீதிமன்றம் என்றாலும் சரி யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல ஆளும் கட்சியின் ஊதுகுழல் போல் செயல்படுகிறதோ என்கிற அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.விசித்திரமான தீர்ப்புகளையும் பார்க்க நேருகிறது.  ‘மனைவிக்கு கணவன் பாதுகாவலன் அல்ல; மனைவியை கணவன் தனது சொந்த உடைமை போன்று பயன்படுத்த முடியாது’ என்று ஹாதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

‘மனைவிக்கு கணவன் பாதுகாவலன் அல்ல! என்ற தீர்ப்பு பின்னாளில் எந்த அளவு நீட்டித்து பொருள் விளங்க வைக்கும் என்பது குறித்து கவலை கொள்ள வேண்டும் நாம்.

 

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கே.எம்அசோகன். இவரது மகள் அகிலா (வயது 25) கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மருத்துவம் படித்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் இவர் முஸ்லிமாக மதம் மாறினார். ஹாதியா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு ஷபின் ஜகான் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணத்தை எதிர்த்து பெண்ணின் தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு பகுதியாக தன் மகள் மதம் மாற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் சிரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்புடன் சேரப் போவதாகவும் தெரிவித்தார். இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் இத்திருமணம் செல்லாது என்று அறிவித்தது. ஹதியாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

 

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஷபின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த விசாரணையின்போது, ஹாதியாவை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கேரள போலீஸார் ஹாதியாவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பாக ஆஜர்படுத்தினர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு ஹாதியாவிடம் அரை மணி நேரம் தனியாக விசாரணை நடத்தியது. நீதிபதிகள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, ஹாதியா மலையாளத்தில் பதிலளித்தார். அவரது பதில்களை கேரள மாநில அரசுக்கு ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் வி.கிரி மொழிபெயர்த்தார்.

ஹாதியாவின் விருப்பம் என்ன என்று நீதிபதிகள் கேட்டபோது, ‘நான் என் கணவருடன் சுதந்திரமாக வாழ விரும்புகிறேன்’ என்று பதிலளித்தார். வேறு மதத்தை பின்பற்றுவது, படிப்பை தொடருவது ஆகியவற்றில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியுமா? என்ற கேள்விக்கு, ‘இந்த நாட்டின் நல்ல குடிமகள் என்ற முறையில் நான் விரும்பும் இஸ்லாம் மதத்தை பின்பற்ற முடிவு செய்துள்ளேன். அதேநேரத்தில் படிப்பை தொடர்ந்து நல்ல மருத்துவராகவும் இருப்பேன். எனது படிப்புச் செலவுகளை கேரள அரசு மேற்கொள்ள விரும்பவில்லை. எனது கணவர் ஷபின் ஜகான் அந்த செலவுகளை ஏற்றுக் கொள்வார்’ என்றார்.

 

சேலம் கல்லூரியில் பாதுகாவலராக யார் இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு, ‘எனது கணவரை பாதுகாவலராக நியமிக்க வேண்டும். வேறு யாரும் அந்த இடத்தில் இருக்க விரும்பவில்லை’ என்று பதிலளித்தார். அப்போது நீதிபதி சந்திரசூட், ‘ஒரு மனைவிக்கு கணவன் பாதுகாவலராக இருக்க முடியாது. மனைவி என்பவர் கணவரின் உடைமை அல்ல. அவளுக்கென்று தனி அடையாளம், வாழ்க்கை மற்றும் சமூகம் உண்டு. என் மனைவிக்கு நான் பாதுகாவலனாக இருக்க முடியாது’ என்றார்.

பாதுகாவலனாக இருக்கமுடியாத ஒரு கணவனிடம் ஒரு பெண் பாதுகாப்பிற்காக ஜீவனாம்சம் கேட்கமுடியுமா?என்ற கேள்வி நாளை வேறு வழக்குகளில் எழும் அல்லவா?

 

திருமணமான 25  வயது ஒரு பெண்னை  11 மாத சட்டத்திற்கு புறம்பான  காவலுக்குப் பிறகு படிக்க அனுமதித்துள்ளது உச்சநீதிமன்றம்.ஆனால், அவள் முறைப்படி திருமணம் முடித்த  கணவன்  பாதுகாவலன் அல்ல, அவள் படிக்கும் கல்லூரியின் முதல்வர்தான்  பாதுகாவலர் என்கிற விசித்திர தீர்ப்பை அளித்திருக்கிறது இந்த உச்சநீதிமன்றம். நாளை படிக்க வரும் திருமணமான பெண்களுக்கு யார் பாதுகாவலராக இருக்கமுடியும் என்ற கேள்வியும் எழுகிறது!

 

இந்த நாட்டில் 25  வயது ஒரு பெண் படிக்கிற போது மதம் மாறக் கூடாதா? சட்டப்படி அது தப்பா?

 

25  வயது ஒரு பெண் படிக்கிற போது தனக்கு பிடித்த ஒருவனை திருமணம் செய்துகொள்ள கூடாதா?  சட்டப்படி அது தப்பா?.

 

திருமணமாகி படிக்கிற போது தனக்கு தன கணவன் பாதுகாவலனாக இருக்கமுடியாதா? சட்டப்படி அது தப்பா?

 

இப்படியான கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதிலளிக்க வேண்டியதிருக்கிறது.

 

 

சேவற்கொடியோன்

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. This ruling by the Supreme Court somewhat restricts the rights of women. It is great that we can use a special service http://resume-writer.net/blog/page/11 to create the unique texts.

Your email address will not be published.

Scroll To Top