ஆர்.கே.நகரில் திமுக மட்டுமே எங்களுக்கு போட்டி : டி.டி.வி. தினகரன் பேட்டி

பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை டி.டி.வி. தினகரன் இன்று நேரில் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:-

ஆர்.கே.நகரில் எங்களுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி, நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். இரட்டை இலையை எதிர்த்து சிலர் வெற்றி பெற்ற வரலாறுகள் உண்டு. சின்னம் யாரிடம் உள்ளது என்பது முக்கியம் இல்லை. இரட்டை இலை டாக்டர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய சின்னம், அம்மா கட்டிக்காத்த சின்னம். இப்போது அது துரோகிகள் கைகளில் உள்ளது. எனவே அதை மக்கள் கண்டிப்பாக புறம் தள்ளுவார்கள். ஆர்.கே.நகர் பொதுமக்கள் அதற்கு நியாயம் வழங்குவார்கள். 30 ஆண்டுகளாக அம்மாவுடன் இருந்த சின்னம்மா சசிகலா தலைமையிலான எங்கள் அணிக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள்.

இரட்டை இலையை மீட்டெடுப்பதற்காகவே, அதை எதிர்த்து போட்டியிடும் சூழ்நிலையை துரோகிகள் உருவாக்கியுள்ளனர். இத்தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தொடர்ந்து வருங்காலத்தில் இரட்டை இலையை மீட்டெடுப்போம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும். சசிகலாவிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக இங்கு வந்தோம்.

மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கள் எங்களிடமிருந்து சென்றுள்ளனர். அவர்கள் பதவி பறிபோய்விடும் என்னும் பயத்தில் என்னிடம் கூறிவிட்டே சென்றனர். உதயகுமார் மற்றும் செங்குட்டுவன் இருவரும் அங்கிருந்து எங்களிடம் வந்தவர்கள். இப்போது மறுபடியும் அங்கு சென்றுவிட்டனர். பிரதிபலனை எதிர்பார்ப்பவர்கள் தான் இவ்வாறு செல்வார்கள். 99 சதவீத தொண்டர்கள் சசிகலாவிடம்தான் உள்ளனர்.

மக்கள் விரும்பாத ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. ஆர்.கே.நகரில் அது பிரதிபலிக்கும். தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுப் பெறுவோம். வாக்கெடுப்பின் போது தான் ஸ்லீப்பர் செல்களை பற்றி அனைவருக்கும் தெரியும். இரட்டை இலையை கொண்டாட அவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்பது ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top