வீராட் கோலி புதிய சாதனை; அதிக சதம், இரட்டை சதம் அடித்த கேப்டன்

 

கேப்டனாக இருந்து அதிக சதம், இரட்டை சதம் அடித்த சாதனைகளில் கவாஸ்கர் சாதனையை முறியடித்த கோலி, லாரா சாதனையை சமன் செய்துள்ளார்.

 

இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் வீராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 62-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 19-வது செஞ்சூரியாகும். அவர் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டிலும் சதம் அடித்து இருந்தார்.

நாக்பூர் டெஸ்டில் இன்று அடித்த சதம் மூலம் வீராட் கோலி புதிய சாதனை படைத்தார். கேப்டன் பதவியில் அவர் 12-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் இந்திய டெஸ்ட் கேப்டன்களில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். அவர் கவாஸ்கரை முந்தினார். கவாஸ்கர் கேப்டன் பதவியில் 11 டெஸ்ட் சதம் அடித்து இருந்தார். அசாருதீன் (9 சதம்), தெண்டுல்கர் (7 சதம்), பட்டோடி, கங்குலி, டோனி (தலா 5 சதம்) ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

விராட் கோலி கேப்டன் பதவியில் ஒரே ஆண்டில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார். இந்த ஆண்டில் அவர் கேப்டன் பதவியில் 10 செஞ்சூரி (டெஸ்ட் 4 + ஒருநாள் போட்டி 6) அடித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா), 2005 மற்றும் 2006-ம் ஆண்டிலும், ஸ்மித் (தென்ஆப்பிரிக்கா) 2005-ம் ஆண்டிலும் தலா 9 சதம் அடித்து இருந்தனர். இதை முறியடித்து கோலி புதிய சாதனை புரிந்தார். சர்வதேச போட்டியில் வீராட் கோலி 51-வது செஞ்சூரியை (டெஸ்ட் 19 + ஒருநாள் போட்டி 32) பதிவு செய்தார்.

சதம் அடித்த விராட் கோலி அந்த சதத்தை இரட்டை சதமாக மாற்றினார். இது அவரின் ஐந்தாவது இரட்டை சதமாகும். இதன்மூலம் கேப்டனாக இருந்து ஐந்து இரட்டை சதங்கள் விளாசிய லாராவுடன் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார் விராட் கோலி.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top