தமிழ்நாடு வெதர்மேன் பதிவு: தென் மாவட்டங்களில் கனமழை; சென்னையில் மிதமான மழை

 

தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழையும் சென்னையில் மிதமான மழை இருக்கும் என தமிழ்நாடு வெதர் மேன் தன்னுடைய முகநூலில் பதிவு செய்துள்ளார்.அதில்

வடகிழக்குப் பருவமழையின் கடந்த 2 காற்றழுத்த தாழ்வுநிலையின் காரணமாக தமிழகத்தின் வடகடற்கரைப்பகுதியில் நல்ல மழை பெய்தது. அடுத்ததாக 3-வது காற்றழுத்த தாழ்வுநிலையில் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மழையைப் பெற உள்ளது.
வடகிழக்கு பருவமழையின் முதல் மற்றும் இரண்டாவது காற்றழுத்த தாழ்வு நிலையில் முதலாவது காற்றழுத்த தாழ்வுநிலையில் சென்னையின் சுற்றுவட்டாரப்பகுதிகளுக்கும், டெல்டா பகுதிகளுக்கும் நல்ல மழை கிடைத்தது. தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவுக்கு மழை ஏதும் இந்த பருவமழையில் இப்போதுவரை இல்லை. இப்போதும் அங்கு வறட்சிநிலைதான் நீடிக்கிறது.

 

வடகிழக்குப்பருவமழையின் 3-வது காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. கடந்த இரு முறை இருந்ததைப்போல் இல்லாமல், இந்த முறை வடதமிழக கடற்கரைக்கு சற்று தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை இருக்கிறது. அதாவது சரியாகச் சொல்லவேண்டுமானால், இலங்கையின் கிழக்கே இருப்பதால், இது இலங்கை வழயாக அரபிக்கடலுக்குள் சென்றுவிடும். ஆதலால், தென்தமிழகத்தில் மேகக்கூட்டமும் அதனால் மழையும் இருக்கும். 28-ந்தேதிக்கு பின், காற்றழுத் தாழ்வு நிலை அரேபியக் கடலுக்குள் செல்லும்.

இந்த வடகிழக்கு பருவமழை சீசனில் முதல்முறையாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு முறையேனும் கனமழை பெய்யும். நாளை முதல் இந்த மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கலாம். ஒரு முறையேனும் கனமழை பெய்யும்.

 

மாஞ்சோலை, பாபநாசம் அணை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும். திருநெல்வேலியிலும் மிக கனமழை இருக்கும். விருதுநகர், மதுரை, டெல்டா மாவட்டங்கள், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் மழை இருக்கும்.

 

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை லட்சத்தீவுக்கு வழியாக அரபிக்கடலுக்குள் செல்லும். ஆதலால், மேற்கு மாவட்டங்களான கோவை, குறிப்பாக நீலகிரி, குன்னூர் பகுதிகள், அருகே இருக்கும் மாவட்டங்களில் ஒருநாள் நல்ல மழை காத்திருக்கிறது. இந்த 3-வது காற்றழுத்த தாழ்வுநிலை தென் தமிழகம் முழுமைக்கும் நல்ல மழையை கொடுக்க சாதகமாக இருக்கிறது.

 

சென்னையைப் பொருத்தவரை மிதமான மழையே இருக்கும். புறநகர்பகுதிகளஆன காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையில் இருந்து கிழக்கில் இருந்து ஈரப்பதக் காற்றுவீசும். பெரும்பாலான அடர்த்தியான மேகக்கூட்டங்கள் கடந்துவிட்டதால், பெரிய அளவிலான மழைக்கு வாய்ப்பில்லை.

அடுத்த 3 நாட்கள் சென்னையில் மிதமான மழையோடு காலநிலை ரம்மியமாக இருக்கும். அவ்வப்போது திடீர்மழையும், சிறு தூறலும் போடக்கூடும். சென்னையில் 26,27,28 ஆகிய தேதிகளில் இடைவெளி விட்டு, அவ்வப்போது மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. ஆதலால், ரெயில்கோட் அல்லது குடை போன்றவற்றை உடன் எடுத்துச் செல்லுங்கள்.

 

4-வது காற்றழுத்த தாழ்வுநிலையா? இருக்கிறது.. ஆனால், இப்போது அது குறித்து பேசத் தேவையில்லை…..
இந்த 3-வது காற்றழுத்த தாழ்வுநிலை அரபிக்கடலில் கலந்தபின், நம்முடைய எம்.ஜே.ஓ. அடிப்படையிலான முறை உருவாக்கம் பெறும். ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி அல்லது டிசம்பர் முதல்வாரத்தில் புயல்கூட உருவாக வாய்ப்புள்ளது.

 

வடகிழக்கு பருவமழை இன்னும் முடிந்துவிடவில்லை. எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள். டிசம்பர் முதல்வாரத்தில் எம்.ஜே.ஓ. வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுநிலையை உருவாக்குவது குறித்து இன்னும் தீவிரமாக கண்காணிக்க வேண்டியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் முன் அதுகுறித்து பேச வேண்டாம். இப்போதுள்ள 3-வது காற்றழுத்த தாழ்வுநிலை நகர்ந்து செல்லட்டும், வறட்சியால் தவிக்கும் நமது தென் மாவட்டங்களில் ஓரளவு மழை கிடைக்கட்டும்.

 

எம்.ஜே.ஓ. என்பதை ஆங்கிலத்தில் தி மேடன் ஜூலியன் ஆசிலேஷன் என்று அழைப்பார்கள். அதாவது பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய ஊசலாட்டத்தை அளவிடும்முறையாகும். கடந்த 1971ம் ஆண்டு அமெரிக்க தேசிய பருவநிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ரானால்ட் மேடன், பால் ஜூலியன் என்பவர்களால் இது கண்டுபிடிக்கப்பட்டது.

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top