ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்ற வாலிபரின் தலையில் போலிஸ் லத்தியால் தாக்கியது

 

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே கல்லுப்பாலம் பகுதியில் மாலை நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் 2 பேரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.

அப்போது, வீதியில் நின்று இருந்த ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனது கையில் இருந்த லத்தியை 2 கைகளாலும் பிடித்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களின் தலையில் ஓங்கி அடித்தார். அந்த அடியானது, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்கிறவருக்கு விழாமல், அதன் பின்னால் அமர்ந்திருந்தவரின் தலையில் விழுந்தது.

பலமான அடி என்பதால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வலியால் அவர் அலறினார். சற்று தூரம் சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து அடிபட்ட வாலிபரும், அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் வாலிபரின் மண்டை உடைந்தது குறித்து அறிந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஆவேசமானார்கள். இதனால் வாகன சோதனையில் இருந்த போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. தள்ளுமுள்ளு உருவானதால் அந்த இடமே பரபரப்பானது.

இந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்தவர்கள், சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் வைரலாக பரவியது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவிட்டார்.

போலீஸ் விசாரணையில், மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை லத்தியால் தாக்கியவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மரிய ஆக்ரோஸ் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மண்டை உடைந்து காயம் அடைந்தவர் மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 24) என்றும் அறியப்பட்டது.

நண்பருடன் அவர் மோட்டார் சைக்கிளில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது. தற்போது ராஜேஷ் சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வாலிபர் ராஜேசை தாக்கியது தொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மரிய ஆக்ரோசை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை நடவடிக்கை எடுத்துள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top