டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் போலி வாக்காளர்களை நீக்கிய பிறகே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரத்து 819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு விட்டனர் என்று தேர்தல் ஆணையம் கூறியதைடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அத்துடன், ஏற்கனவே உத்தரவிட்டபடி டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லி சென்று தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வருமாறு:

வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: நவம்பர் 27
வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள்: டிசம்பர் 4
வேட்பு மனு பரிசீலனை செய்யும் நாள்: டிசம்பர் 5
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்: டிசம்பர் 7
வாக்குப்பதிவு நடைபெறும் நாள் : டிசம்பர் 21
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்: டிசம்பர் 24

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், அருணாசலப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் காலியாக இருக்கும் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top