தமிழக மீனவர்களின் படகில் கண்டெடுக்கப்பட்ட குண்டு இந்திய கடலோர காவல்படையின் குண்டு தான்: கமாண்டர் பேட்டி

ராமேசுவரம்:

கடந்த 13-ந் தேதி ராமேசுவரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்த கொண்டு இருந்த போது இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதாக புகார் கூறப்பட்டது. இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டது குறித்து மீனவர்கள் காவல் துறையில் புகாரும் அளித்து இருந்தனர்.

இந்த சம்பவத்தில் மீனவர்கள் ஜான்சன், பிச்சை ஆரோக்கியதாஸ் ஆகியோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

துப்பாக்கி சூடு நடந்தபோது மீனவர்களின் படகில் இருந்த குண்டு கைப்பற்றப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை இந்திய கடலோர காவல்படை முற்றிலுமாக மறுத்தது. நாங்கள் துப்பாக்கி சூடு எதுவும் நடத்தவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், மீனவர்களின் படகில் கண்டெடுக்கப்பட்ட குண்டு, இந்திய கடலோர காவல்படையினர் பயன்படுத்தக்கூடியது அல்ல என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ராமேசுவரம் தங்கச்சி மடத்தில் உலக மீனவர் தினம் மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் கமாண்டர் ராமாராவ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், மீனவர்கள் படகில் கைப்பற்றப்பட்ட குண்டு கடலோர காவல்படையில் பயன்படுத்தப்படும் குண்டு என தெரிவித்தார்.

ராமேசுவரம் மீனவர்கள் படகு மீது துப்பாக்கி சூடு நடைபெற்ற நேரத்தில் சென்னை கடலோர காவல் படைக்கு சொந்தமான “ராணி அபாக்கா” என்ற கப்பல் ரோந்து பணியில் இருந்தது உண்மை தான். அவர்கள் துப்பாக்கியால் சுட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேபோல் மீனவர்களின் படகில் இருந்து கண்டெடுக்கப்பட்டது கடலோர காவல்படையினர் சுட்ட குண்டு தானா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது.

படகில் கைப்பற்றப்பட்ட குண்டு இந்திய கடலோர காவல் படையினர் பயிற்சிக்கு பயன்படுத்தும் 0.22 எம்.எம். ரக குண்டுகள் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிருபர்கள் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் தெரிவித்த கருத்துக்கள் குறித்து கேட்டபோது, அவர் ரப்பர் குண்டு என நினைத்து கருத்து தெரிவித்திருக்கலாம் என்று கமாண்டர் ராமாராவ் கூறினார்.

இவரது கருத்து மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனின் கூற்றுக்கு எதிராக இருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு கேள்வி குறியாகவே உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top