பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறை விசாரணை?

பெங்களூரு:

சசிகலாவின் உறவினர்கள் திவாகரன், இளவரசி, தினகரன், இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் 5 நாட்கள் வருமானவரித்துறை சோதனை நடந்தது. ஜெயா டி.வி., மிடாஸ் நிறுவனம், ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட சசிகலா உறவினர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் என சுமார் 108 இடங்களுக்கு மேல் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பினாமி சொத்து, போலி நிறுவனங்கள் பற்றிய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

எதை தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முதற் கட்டமாக சசிகலாவிடம் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக சென்னையில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமையே பரப்பன அக்ரஹார சிறை தலைமை சூப்பிரண்டிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

இதனால் நாளை சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருந்து வரும் வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் சசிகலாவிடம் சிறை சூப்பிரண்டு முன்னிலையில் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது. இந்த விசாரணை முடிந்ததும் அடுத்த கட்டமாக அடுத்த வாரம் இளவரசியிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிகிறது.

வருகிற 23-ந் தேதிக்கு பிறகு சசிகலா, இளவரசியை அவர்கள் உறவினர்கள் சந்திக்க உள்ளனர். இளவரசியை அவரது மகன் விவேக் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். சிறையில் உள்ள சசிகலா, இளவரசியை அவர்களது உறவினர்கள் கடந்த 8-ந்தேதி சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனை குறித்து இன்று விளக்கம் அளித்துள்ள வருமான வரித்துறை, தேவைப்பட்டால் நீதிமன்ற அனுமதி பெற்று சசிகலா மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்தப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top