ஹெல்மெட் இல்லா வாகன ஓட்டிகளை போலீசார் அத்துமீறி பிடிப்பு;விபத்தில் இரண்டு மாணவிகள் காயம்

நேற்று மாலை குலசேகரத்தில் போலீசார் தலைக் கவசச் [ஹெல்மட்] சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்திலிருந்து 2 பள்ளி மாணவியர் வெளியே தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.

 

குலசேகரம் காவல் நிலையத்தின் எதிரில், சற்று முன்னே நின்றுகொண்டு, உதவி ஆய்வாளர் மற்றும் 2 ஊர்க்காவல்ப் படை போலீசார் தலைக்கவசச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குலசேகரம் சந்தைப் பகுதியிலிருந்து அரசுமூடு சந்திப்பு நோக்கி தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரைப் போலீசார் லத்தியை நீட்டி தடுத்து நிறுத்த முயன்றனர். இதில் அந்த இளைஞர் போலீசாருக்குப் பயந்து மோட்டார் சைக்கிளை வேகமாக திருப்ப முயன்றார். இந்நிலையில் எதிரே மார்த்தாண்டத்திலிருந்து பெருஞ்சாணி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, இளைஞர் மீது மோதிவிடாமல் இருக்க திடீரென்று பிரேக் செய்து நிறுத்தப்பட்டது. இதில் பேருந்தினுள் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவியர் இருவர் பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.

 

இதையடுத்து அந்த இரு மாணவியரையும் அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு குலசேகரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஒரு மாணவி திருவட்டாறு அருணாசலம் மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மங்கலம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமாரின் மகள் கார்த்திகா. மற்றொரு மாணவி அதே பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கிறார். குலசேகரம் அரசுமூட்டைச் சேர்ந்த சிவராமன் மகள் அபிராமி இவர். தகவலறிந்த இம்மாணவியரின் பெற்றோர் விரைந்து மருத்துவமனைக்கு வந்தனர்.

 

இச்சம்பத்தைத் தொடர்ந்து மாணவியர் அனுமதிக்கப்பட்டிருந்த ஆரணிவிளை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை முன்பு மாணவியரின் ஊர்மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மாணவியரிடமிருந்து புகார் பெறப்பட்டனர்.

 

சம்பவம் நிகழ்ந்த பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ மனோ தங்கராஜ், மருத்துவமனையில் மாணவியரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் தெரிவிக்கையில், ’’போலீசார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்பு முடிவடையும் பரபரப்பு மிகுந்த மாலை வேளையில், தலைக்கவச சோதனையை செய்துள்ளனர். இதனால் தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 மாணவியரின் மருத்துவச் செலவை போலீசார் ஏற்க வேண்டும் என்றார்.

 

இது குறித்து மேலும் ஒருவர் கூறுகையில்,’’தலைக்கவசமே உயிர் பாதுகாப்புக்காகத் தான். ஹெல்மெட் இல்லாமல் வருபவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அதை எப்படிச் செய்வது? நடுவழியில் பிரதான சாலைகளில் நின்று கொண்டு லத்தியை வாகனத்தின் குறுக்கே நீட்டினால் விபத்துக்கள் ஏற்படத்தான் வாய்ப்பு அதிகம். அபராதம் கட்ட பயந்து திடீர் என பிரேக் பிடித்து மாற்றுப் பாதையிலோ அல்லது வேகமாகவோ சிலர் இயக்குகின்றனர்,. இதனால் பாதிக்கப்படுவது சாமானிய பொதுமக்கள் தான். ஹெல்மெட் சோதனை அவசியம் தான், அதே நேரத்தில் அதைச் செய்யும் முறை சரிதானா என போலீஸார் சிந்திக்க வேண்டும்” என்றார் அவர்.

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top