பேரறிவாளனை விடுதலை செய்ய அற்புதம்மாள் வேண்டுகோள்

 

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், பேரறிவாளனை விடுதலை செய்ய தங்களுக்கு விருப்பம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என அவரின் தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுள்ள உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை தண்டனையில் இருந்து விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

 

மேலும், பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ் கடந்த அக்டோபர் 18-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “தாங்களும், தங்கள் மகன் ராகுல், மகள் பிரியங்காவும் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைக்கும் பட்சத்தில் நீண்ட காலம் சிறையில் கழித்துவிட்ட சிறைவாசிகளை மத்திய அரசு விடுதலை செய்ய வாய்ப்புள்ளது. மனிதநேய அடிப்படையில் இந்த வழக்கில் தாங்கள் ஒருவரால்தான் இந்த பேருதவியை செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், அற்புதம்மாள் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்குமூலம் பெற்ற அதிகாரியே பேரறிவாளன் கூறியதை நான் பதிவு செய்யவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார். உண்மைகள் வெளிவந்துள்ள பிறகும் பேரறிவாளன் சிறைக்குள் இருப்பது கொடுமையானது. எனவே, எனது மகனை உடனே விடுதலை செய்ய வேண்டும். கடந்த 1999-ம் ஆண்டே காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்திக்க முயற்சித்தேன். ஆனால், அது நடக்கவில்லை. தற்போதுள்ள சூழலில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் எங்கள் தரப்பு நியாயத்தை அவரிடம் எடுத்து உரைப்பேன்.

 

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் அந்த வழக்கில் உள்ள குளறுபடிகளை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top