கோவா சர்வதேச திரைப்பட விழா;பாஜக தலையீடு! நடுவர் பொறுப்பில் இருந்து மேலும் ஒருவர் ராஜினாமா

 

 

 

 

கோவாவில் நடைபெற உள்ள  48-வது சர்வதேச திரைப்பட விழா நடுவர் பொறுப்பில் இருந்து தேர்வுக்குழு தலைவர், மற்றும் நடுவரை தொடர்ந்து இன்று மேலும் ஒரு நடுவர் ராஜினாமா செய்துள்ளனர்.

 

கோவா தலைநகர் பனாஜியில் வரும் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 48-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் திரையிடப்படுவதற்கான இந்திய திரைப்படங்கள், மற்றும் விருதுக்குரிய திரைப்படங்களை தேர்வு செய்வதற்காக 13 உறுப்பினர்களை கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த ‘எஸ்.துர்கா’ .[செக்ஸ்சி துர்கா] என்ற மலையாளப் படம் மற்றும் ‘நியூட்’ (நிர்வாணம்) என்ற மராத்தி மொழிப் படம் ஆகிவற்றை நீக்கம் செய்து திரையிடப்படும் இந்திய படங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது.

இது தேர்வுக்குழு தலைவர் மற்றும் நடுவர்களில் சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோவா திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரபல பாலிவுட் இயக்குநர் சுஜோய் கோஷ் நேற்று அறிவித்திருந்தார்.

அவரை தொடர்ந்து தேர்வுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பிரபல தேசிய விருது பெற்ற இந்திப் பட இயக்குனரும் திரைக்கதை ஆசிரியருமான அபுர்வா அஸ்ரானி இன்று தெரிவித்தார்.

தேர்வுக்குழு தலைவர் சுஜோய் கோஷ் எடுத்த முடிவை வரவேற்பதாகவும், மிக தரமான படங்களை காட்சிப்படுத்தும் பொறுப்பில் இருந்து தவறிவிட்ட நிலையில் கோவா திரைப்பட விழாவில் பங்கேற்க எனது மனசாட்சி தடையாக உள்ளதால் நடுவர் பொறுப்பில் இருந்து விலக தீர்மானித்ததாகவும் அபுர்வா அஸ்ரானி குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், தனது இயக்கத்தில் வெளியான எஸ். துர்கா’ என்ற மலையாளப் படத்தை தேர்வு பட்டியலில் இருந்து நீக்கியது தொடர்பாக மத்திய  தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து அப்படத்தின் இயக்குநர் சனல் குமார் சசிதரன் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், தேர்வுக்குழு நடுவர் பட்டியலில் இடம்பெற்றிருந்த கியான் கொரேயா என்பவரும் இன்று தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாக இன்று மாலை தனது பேஸ்புக் பக்கத்தில் இயக்குநர் சனல் குமார் சசிதரன் தெரிவித்துள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top